KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி உண்மையில்லை


கோடை வெப்பம் காரணமாக ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதற்க்கு சான்றாக தந்தி டிவி யின் காணொளி பதிவிடப்படுகிறது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது இச்செய்தி வெறும் வதந்தி எனவும் இணைப்பாக வரும் காணொளி சென்ற கல்வியாண்டு வெளியிடப்பட்டது எனவும் தெரிவித்தனர். மேலும் பள்ளி திறப்பை பற்றி விவாதிக்க தற்போது எந்த சூழ்நிலையும் கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்தனர்

1,6,9,11ம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் (மே 02) புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

1,6,9,11ம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் (மே 02) புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ..
புதிய பாடத்திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் வெளியிட இருக்கிறார்

6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்

ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போது 6,7,8 ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.

உபரி என கணக்கிட்டு ஒரு ஆசிரியரை குறைப்பதால், மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து பாடங்களை நடத்துவது சாத்தியம் ஆகாது. ஏற்கனவே ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடத்துடன் தமிழ், சமூக அறிவியல் பாடத்தை கூடுதலாக எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உபரி என கூறி மேலும் ஒரு பாட ஆசிரியர் குறையும் போது மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.உபரி என கணக்கிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேர், கோவையில் 173 என ஆறாயிரம் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உங்கள் குழந்தை பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமா ? சில மாதங்களுக்கு முன் விகடனில் வெளியான கட்டுரை கவனமாகப் படியுங்கள்


உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை.

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.

* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

      டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன...

இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை.

நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்;

*குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!*

  சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?
     
முக்கியமான 5 கட்டளைகள்:

      *மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம்,  உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள்.

அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை.

அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள்.

இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள்.

ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும்.

இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும்.

எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள்.

      * வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள்.

கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள்.

குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள்.

ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 
     
* பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி  இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

      * சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.

*குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள்.*

கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள்.

*நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.*

      * குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”
‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’

‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?”
‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’

‘‘பலாத்காரம்னா என்னப்பா?”
‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’

‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு  வாங்குறீங்க?”
‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’

‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”
‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

*அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்!*

*குட் டச் / பேட் டச்*
     
     குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள்.

கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச்.

தடவக் கூடாது -

*பேட் டச்*

மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச்.

அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள்.

காதல்

      குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

சுய இன்பம்

      ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.

ஆப்த வாக்கியம்

      ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்!

2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் ஒரு நபர் ஊதியக்குழுவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்

2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் ஒரு நபர் ஊதியக்குழுவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்

தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.
முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாகசேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்தஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.
எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில்கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் தேர்வு நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில், 
ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் புத்தக தயாரிப்பு பணிகள், நடந்து வருகின்றன.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணவர்களுக்கு வழங்கப்படும்.இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறையை, பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த உள்ளது. இதற்கான வழிமுறைகளை, புதிய பாடத்திட்டக்குழு தயாரித்துள்ளது. ஆன்லைன் தேர்வு முறைக்கு ஏற்ப, புதிய பாடத்திட்ட புத்தகங்களில், கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக, ஐந்தாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறை அறிமுகமாகஉள்ளது. 'ஸ்மார்ட்' வகுப்புகள் முழுமையாக துவங்கிய பின், தொடக்க பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

உதவி வன பாதுகாவலர் பதவி முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ல் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

உதவி வன பாதுகாவலர் பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 1ஏல் அடங்கிய உதவி வனப்  பாதுகாவலர் பதவிக்கான 14 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது.

இத்தேர்வில் 10,459 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான  அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 472 விண்ணப்பதாரர்களின்  பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை  28ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

இணையதள வீடியோ, 'பார்கோடு'டன் பிளஸ் 1 புது பாட புத்தகம், 'பளிச்


புதிய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 புத்தகம், கறுப்பு - வெள்ளையில் இருந்து, வண்ணமயமாகமாறியுள்ளது.புத்தகங்களின் வடிவம் மாற்றப்பட்டதுடன், பாடம் தொடர்பான, இணையதள வீடியோ இணைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, 13ஆண்டு களுக்கு பின், பாடத் திட்டத்தில்மாற்றம் செய்துள்ளது.பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில் அமைக்கப்பட்ட கமிட்டியினர், பாடத் திட்டம் மற்றும் பாட புத்தக தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகமாகிறது.

இதில், ஒன்று, ஆறு, ஒன்பது ஆகிய வகுப்புகளுக்கு, முதல் பருவத்துக்கான புத்தகம் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், வண்ணமயமான அட்டைகள், புகைப்படங்கள், சித்திரங்கள், பார்கோடு ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 1 வகுப்புக்கு மொழி பாட புத்தகங்களின் தயாரிப்பு, முழுமையாக முடிந்துள்ளன. மற்ற பாடங்களுக்கு, புத்தகம் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது அமலிலுள்ள, பழைய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாட புத்தகம், சிறிய அளவில், அதிக பக்கங்களை கொண்டதாகவும், கருப்பு - வெள்ளையிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. புதிய பாடப் புத்தகத்தில், பிளஸ் 1 புத்தகம், மற்ற வகுப்புகளைப் போல், 'ஏ - 4' அளவிற்கு மாற்றப்பட்டு, வண்ணமயமாக மாறியுள்ளது.

இவற்றில், ஒவ்வொரு பாடத்திலும், அதன் பார்முலாக்கள், சமன்பாடுகள் வரும் இடங்களில், அதற்கான உதாரணங்கள், படங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.அன்றாட வாழ்க்கையில் உள்ள சம்பவங்கள், காட்சிகளையே, உதாரணமாக்கி, படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், குறிப்பிட்ட பாட அம்சத்திற்கான, 'வீடியோ' செயல் விளக்கமும், அதற்கான இணையதள, யூ.ஆர்.எல்., இணைப்பும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பயன்படுத்தி, மாணவர்கள், 'யூ டியூப்' அல்லது இணையதள பக்கங்கள் வழியாக, தெரிந்து கொள்ள முடியும்

தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. 
ஐகோர்ட் உத்தரவை பொது அறிவிப்பாக இணையதளத்தில் உடனடியாக வெளியிட ஆணையிடப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் 6-ம் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் 3 தேர்வு மையங்களை குறிப்பிடலாம். அதில் ஒன்று ஒதுக்கப்படும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கணினி மூலம் ஒதுக்கப்படும் இந்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது. இதனால் புதிதாக நீட் தேர்வு எழுத அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், சிரமங்களை சந்திக்க நேரிடலாம். எனவே இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்துள்ளது

அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை,அங்கு நூலகம் அமைக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசை பொறுத்தவரை அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள் குறைவாக இருந்தால் அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அரசு பள்ளிகள் மூடப்படாது அங்கு நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Middle school HM to AEEO seniority DEE proceedings
posted from Bloggeroid

நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை

நாளை முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் 28ம் தேதியும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். இதையடுத்து திங்கட்கிழமை 30ம் தேதியும் புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களிலும் எந்தவித பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இன்று வங்கி முழு நாளும் செயல்படும் என்றும் அவசர பணத்தேவை, அலுவல்களை இன்று முடித்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.  அவசரமாக பணம் தேவைப்படும் பொதுமக்கள் ஏடிஎம்களில் முன்னதாகவே பணத்தை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.