Title of the document




சிவகங்கை அருகே, அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, ஆங்கில வழி மழலையர் பள்ளியை தொடங்கியுள்ளனர். இங்கு பயிலும் குழந்தைகள், தொடக்க கல்வி பயில அரசு பள்ளியில் சேருவதால், அங்குள்ள மாணவர் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்லராதினிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் ஊரில் தாங்கள் படித்த அரசு பள்ளியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை கண்டு அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்க முடிவு செய்தனர். இதற்காக வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் நண்பர்கள் உதவியுடன் அரசு பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினர். கழிப்பறை, குடிநீர், மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினர்.

பின்னர், அனைத்து வசதிகளுடனும் கூடிய மழலையர் பள்ளியை உருவாக்கினர். இளைஞர்களின் இந்த நடவடிக்கையால் உள்ளூர் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

படித்து வேலையில்லாமல் இருக்கும் உள்ளூர் பட்டதாரிகள் 2 பேரை, மழலையர் பள்ளி ஆசிரியர்களாக நியமித்து அவர்களுக்கு ஊதியமும் அளிக்கும் இளைஞர்கள், குழந்தைகளுக்கு ஆங்கில வழிக் கல்வியை இலவச அளித்து வருகின்றனர்.

ஆங்கில வழி மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகள், தொடக்க கல்வி பயில்வதற்காக, அரசு பள்ளியை நாடுகின்றனர். இதன் காரணமாக அரசு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்களின் இந்த முயற்சிக்கு அரசு ஆதரவு அளித்தால் பள்ளியின் தரம் மேலும் உயரும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கல்லராதினிப்பட்டி கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post