உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம்: தமிழக தேர்தல் ஆணையம்.

உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும், அது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த அக்டோபர் 4-இல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதையடுத்து, நவம்பர் 28-ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார். இந்நிலையில்  இதற்கு இன்று பதில் அளித்த தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது