Title of the document

ஒரு இளைஞனின் வாழ்வில் 16 ஆண்டுகள் கல்விக்குச் செலவாகிறது. ஆனால் இந்தக் கல்வி அவனுக்கு என்ன கற்றுத் தருகிறது என்று பார்த்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. சுயமாக வாழ்வதற்கான எந்தத் தகுதியையும் இந்தக் கல்வி அவனுக்குக் கொடுப்பதில்லை. மாறாக, பணம் ஈட்டுவதற்கான ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மட்டுமே கற்றுக் கொண்டு வெளி உலகத்திற்கு வருகிறான் அவன். அந்தத் தொழில்நுட்ப அறிவுக்கு மதிப்பு குறையும் போது அவனுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது.

நீச்சல் தெரியாது; சாலைகளில் நடக்கத் தெரியாது; தன் உணவைத் தானே சமைத்துக் கொள்ளத் தெரியாது. அடுத்த மனிதனோடு எப்படி அனுசரணையாக வாழ்வது என்று தெரியாது. ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது. ஏன், சரியாக மூச்சு விடுவது எப்படி என்று கூடத் தெரியாது. அதற்காகத் தனியாக ஒரு வகுப்பு. வாரம் இரண்டு மணி நேரம் ’ மூச்சு விடுவது எப்படி? ’ என்று சாமியார்களிடம் கட்டணம் கட்டிக் கற்றுக் கொள்கிறான் இன்றைய இளைஞன்.

மூச்சு விடுவது எப்படி என்று வகுப்புகளுக்குச் சென்று கற்றுக் கொள்ளும் ஜீவராசி இந்த உலகத்திலேயே மனிதன் ஒருவனாகத்தான் இருப்பான். அதை விட அநியாயம் சிரிப்பதற்குப் பயிற்சி தரும் காலை வகுப்புகள். இதற்கு அடுத்து ’ வாழ்வது எப்படி? ’ என்று ஒரு மேல்நிலை வகுப்பு. ஆக, அவன் 16 ஆண்டுகள் பள்ளியில் கற்றுக் கொண்டதெல்லாம் வாழ்க்கைக் கல்வி அல்ல. வேறு ஏதோ கல்வி. பணம் காய்க்கும் மரத்திலிருந்து பணம் பறிப்பது எப்படி என்பதைக் கற்பிக்கும் கல்வி. இதனால் அவனுடைய உடல்நலமும் கெட்டுப் போகிறது. முப்பது வயதிலேயே முதுமை எட்டிப் பார்க்கிறது. அதற்கும் ஆன்மீகவாதியிடம் ஓடுகிறான். இன்னும் சில ஆண்டுகளில் இப்போது தெருவுக்குத் தெரு மருத்துவர்களைப் பார்ப்பது போல் தியானமும், யோகாவும் கற்பிக்கும் சாமியார்களைப் பார்க்கப் போகிறோம்.

கோவில் சிலைகளில் நாம் ஆண் பெண் உருவங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த உருவங்கள் நம் உருவங்களைப் போலவா இருக்கின்றன? அவை யோக உடல்கள். நம்முடையவை போக உடல்கள். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைப் போன்ற உடல்களை வைத்துக் கொண்டிருந்தால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்?

விலங்குகளும் பூர்வகுடி மக்களும் இந்தப் படித்த மனிதர்களை விட வாழ்க்கையை வெகு சீராகவும், லாவகமாகவும் எதிர்கொள்வதை நாம் கவனிக்கலாம். கொலையோ தற்கொலையோ அவர்களிடையே இல்லை. தங்கள் உணவைத் தாமே தேடிக் கொள்வதிலிருந்து அவர்களது வாழ்க்கைப் பயணம் துவங்குகிறது. வாழ்வது எப்படி என்ற ’ கலை ’ யை யாரும் அவர்களுக்குக் கோடை வகுப்புகளில் கற்றுத் தருவதில்லை. ஒரு நதி எப்படித் தன் பாதையை வகுத்துக் கொள்கிறதோ அதைப் போலவே அமைகிறது ‘படிக்காத ’ அந்த மனிதர்களின் வாழ்க்கை.

(சாரு நிவேதிதா, டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழ் இணைப்பு - 21.8.2009)

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post