பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
நாட்டுக்கு முதல் தங்கம் கிடைக்கக் காரணமாக இருந்த மாரியப்பனுக்கு நாடு முழுவதும் ஏராளமானோர் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி, மத்திய அரசு ரூ. 75 லட்சம் உட்பட பல்வேறு தரப்பினர் பரிசுத்தொகையை அளித்து வருகின்றனர். மேலும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர்கள் பி.வி. சிந்து, சாக்ஷி போல பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கும் கார் உள்ளிட்ட பரிசுகள் அறிவிக்கப்படுமா என்ற கோரிக்கை டுவிட்டர் மூலம் எழுந்தது.
இந்த நிலையில், தமிழக வீரர் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் ஜீப் ஒன்றை பரிசளிக்க முன் வந்துள்ளது. மேலும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து மாரியப்பனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருக்கும் மஹீந்திரா நிறுவனம் கார் பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது
Post a Comment