Title of the document

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணைப்படி 2017 இல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை செல்லாது என அறிவித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுவுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
2013 இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றோர் நலச் சங்கத் தலைவர் இளங்கோவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 மே 22 இல் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டு, ஆகஸ்டு 17, 18ஆம் தேதிகளில் தேர்வு நடத்தியது.
இந்நிலையில், 2017 இல் ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அழைக்கப்பட்டனர்.
இதில், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறாத பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும், அரசு ஆசிரியராக பணிபுரியும் ஒருவருக்கும் சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் நியமனம் வெளிப்படையாக நடைபெறவில்லை. வெயிட்டேஜ் மதிப்பெண்களை கணக்கிடாமல் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே 2017, ஏப். 4 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையின் படி நடைபெற்ற ஆசிரியர் நியமனங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் தேர்வு செய்யபட்ட ஆசிரியர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிகல்வி துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் ஆகியோர் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, ஜன. 7 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post