Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கால ஓட்டத்தில் மறந்துபோன ஒரு ஆளுமையைக் கொண்டாடிய அரசுப்பள்ளி மாணவர்கள்!!!

Sunday, 23 September 2018


கால ஓட்டத்தில் மறந்து போன பல ஆளுமைகளுள் முக்கியமானவர் இராபர்ட் ப்ரூஸ் புட் ஆவார். ஆங்கிலேயரான இவர் நிலத்தை அளவீடு செய்ய இந்தியா வந்தாலும்,  தனது சிறப்பான தொல்லியல், ஆய்வுகள் மூலம் இந்திய முந்து வரலாற்றின் தந்தை (Father of Indian prehistory) என்று பெயர் எடுத்தவர்.
‘இந்திய முந்து வரலாற்றின் தந்தை’
இராபர்ட் ப்ரூஸ் புட் அவர்களின் 184 ஆவது பிறந்ததின கொண்டாட்டம் எங்கள் பள்ளியில் (ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நீர்முள்ளிக்குட்டை, வாழப்பாடி ஒன்றியம் சேலம் மாவட்டம்) இன்று நடைபெற்றது.
                       
அந்த அளவிற்கு இவர் என்ன சாதனைகள் புரிந்துள்ளார்? ஆங்கிலேயரான இவரது பிறந்த நாள் அவ்வளவு இன்றியமையானதா?
ஆம்...இவர் யாரெனத் தெரிந்து தெளிந்தால் நம் மனதின் ஐயங்களுக்கு விடை கிடைக்கும்.
இராபர்ட் ப்ரூஸ் புட் அவர்கள் 1834 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ந்தேதி பிறந்தவர். ஆங்கிலேயரான இவர் "ஜியாக்கரபிகல் சர்வே ஆஃப் இந்தியா" என்னும் அமைப்பின் மூலமாக பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அளவீடு செய்யும் பணி மேற்கொண்டார். வரலாற்றின் மீது இருந்த பற்றின் காரணமாக செல்லும் இடங்களில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளையும் மேற்கொண்டார்.1862 ஆம் ஆண்டு சேலத்தில் நில அளவைப்பணியைத் துவங்கி சேலம் நகரின் மையப்பகுதியினை கண்டறிந்தார். அதற்கு ஆதாரமான கல்வெட்டு ஒன்று  சேலம் CSI சர்ச்சில் இடம்பெற்றுள்ளது. அதில் "சென்டர் பாயிண்ட் ஆப் சேலம்" என்று பொறிக்கப்பட்டு சர்வே நடந்த வருடமான 1862 என்னும் ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளது.
                               
தனது 24 வயதில் ஆய்வுப் பணியை தொடங்கிய ப்ரூஸ் புட் 33 ஆண்டுகள் நிலத்தை அளவீடு செய்யும் பணியினையும், தொல்லியல் எச்சங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியினையும் செய்து வந்தார். இவர் சிறந்த ஓவியரும் ஆவார். சர்வே செய்யப்பட வேண்டிய பல இடங்களை ஓவியமாகவும் வரைந்துள்ளார்.
                               
கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் என வகைபிரித்து அந்த காலகட்டங்களில் கிடைத்த பொருட்களை எல்லாம் சேகரித்து வந்தார்.1863 ஆம் ஆண்டு சென்னை பல்லாவரம் அருகில் இவர் கண்டறிந்த பல மில்லியன் ஆண்டுகள் பழமையான கற்காலக் கைக்கோடரியே இந்திய வரலாற்றை கற்காலம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வாகும்.
                             
திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள குடியம் குகை (Gudiyam Cave) இவர் கண்டறிந்தது ஆகும்.தொல்லியல் ஆய்வுச் சான்றுகளின்படி இக்குகைகள் பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையெனக் கருதப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் அகழ்வாய்வுத் துறையினரால் இவ்விடம் 1962-64 ல் அகழ்வாய்வு செய்யப் பட்டது.
                           
சேலம் சேர்வராயன் மலைப்பகுதி ஏற்காட்டில் உள்ள 'ஐவி காட்டேஜ்' என்னுமிடம் இவர் தங்கிச் சென்ற இடமாகும். ஏற்காட்டில் உள்ள பல்வேறு மலை கிராமங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அங்கிருந்த புதிய கற்காலக் கருவிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தினார். இன்றளவும் கூட சேர்வராயன் மற்றும் கல்வராயன் மலை கிராமங்களில் உள்ள கோயில்களில் வழிபடும் கல் தெய்வங்களாகவும், ஓடை, ஆறு முதலான நீர்நிலையோரங்களிலும் புதிய கற்காலக் கருவிகள் காணக்கிடைக்கின்றன.
                         
இறந்த பிறகு கொல்கொத்தாவில் தகனம்  செய்யப்பட்ட போதும், அவரது இறுதி விருப்பத்தின்படி ஏற்காடு டிரினிட்டி சர்ச்சில் உள்ள அவரது மனைவி கல்லறை அருகிலேயே அவரது அஸ்தியைக் கொண்டு கல்லறை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ’இந்திய முந்துவரலாற்றின் தந்தை’ என்று அழைக்கப்படும் மாபெரும் மனிதர் நம் சேலம் மாவட்டத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டது, சேலம் மட்டுமல்ல , தமிழ்நாட்டிற்கே பெருமை...இவரது ஆய்வுக்குப் பின்னரே சொந்த மண்ணின் பெருமை உணர்ந்து இன்றளவும் நாமெல்லாம் ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
           
நிகழ்வில் இராபர்ட் ப்ரூஸ் புட் அவர்கள் வாழ்க்கை வரலாறு  குறித்து அருமை நண்பர் ரமேஷ் யந்த்ரா  இயக்கிய  'குடியம் குகைகள்' என்ற ஆவணப்படம்  மாணவர்களுக்கு காட்டப்பட்டது. அப்படியே மாணவர்களுக்கு இவரைப்பற்றி சிறிய உரை நிகழ்த்தி எங்கள் பள்ளிச் சேகரிப்பில் உள்ள 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த புதிய கற்காலக் கருவிகளையும் பார்வைக்கு வைத்தேன்...
வை.கலைச்செல்வன்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
நீர்முள்ளிக்குட்டை
வாழப்பாடி ஒன்றியம்
சேலம் மாவட்டம்
Cell no : 9655300204
Post a Comment

Popular Posts

 

ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.   கோபி அருகே காசிபாளையத்தி...

Google+ Followers

Follow by Email

Most Reading