ஆன்-லைனில் பதிவு செய்தால் வீடு தேடி வரும் பாட புத்தகங்கள்: அலைச்சலைத் தவிர்க்க நடவடிக்கை

பாடநூல்களை வாங்குவதற்காக பெற்றோர் வெகு தொலைவிலிருந்து சென்னைக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, ஆன்லைனில் பதிவு செய்து வீட்டுக்கே நேரடியாக பாடநூல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்திலும், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் மட்டுமே நேரடியாக விநியோகிக்கும் பணி நடைபெறுவதால், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பெற்றோர் பாடநூல்களை வாங்க வந்து செல்கின்றனர்.
இதனால் கடந்த மூன்று நாள்களாக அந்த இரு இடங்களிலும் பெற்றோர் 2 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் சிறப்பு கவுன்ட்டர்களை அமைத்திருந்தாலும், நீண்ட வரிசையில் நிற்பது குறையவில்லை.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசுப் பள்ளிகளில் இலவசமாகப் புத்தகங்களை விநியோகம் செய்வதற்கு பாடநூல்களை அனுப்பி வருகிறோம். இந்த வாரத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்துவிடும். மற்ற பள்ளி மாணவர்களுக்குப் புத்தகம் வழங்க, பள்ளிகளே நேரடியாக இணையதளத்தின் வழியாக ஆர்டர் செய்யலாம். இதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் தகவலை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணையத்தில் (https://textbookcorp.in/users/student_login) பதிவுசெய்து 48 மணி நேரத்துக்குள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பாடநூல்களுக்கான தொகையுடன் கூடுதலாக தபால் செலவையும் செலுத்தினால் போதுமானது. ஆன்லைன் வழியே கட்டணம் செலுத்த முடியாதவர்கள், அருகில் உள்ள இணைய சேவை மையங்களுக்கும் சென்று புத்தகங்களைப் பெற பதிவு செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் பெற்றோர் நீண்டதூரம் பயணிக்கவோ வரிசையில் நிற்கவோ அவசியமில்லை. தற்போது, முதல் தொகுதி புத்தகங்கள் மட்டும் வழங்கப்படுகின்றன. இந்த மாத இறுதியில் இரண்டாவது தொகுதியும் கிடைத்துவிடும். இதையும் பொதுமக்கள் வீட்டில் இருந்தே வாங்கிக்
கொள்ளலாம். தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க 48 லட்சம் புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 22 லட்சம் புத்தகங்களும் தயார்நிலையில் உள்ளன' என்றனர்