தேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

தில்லுமுல்லுக்கு இடம் தராமல், பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், மார்ச், 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. முதல் நாளில், தமிழ் உட்பட, மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.நாளை, ஆங்கில மொழி பாடத்துக்கான தேர்வு நடக்கிறது. தேர்வில், 8.88 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் நாள் தேர்வில், பறக்கும் படை சோதனையில், சென்னையில் மட்டும், ஒரு, தனி தேர்வர் பிடிபட்டார்.தேர்வுகளை நடத்தும் கண்காணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் போன்ற பதவிகளில், தேர்வுத்துறை வழியாக, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

முதல் நாள் தேர்வன்று பல இடங்களில், தங்கள் வீட்டுக்கும், தேர்வு பணி ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிக்கும் இடையே அதிக துாரம் உள்ளதாக கூறி, ஆசிரியர்கள், பணியிடங்களை மாற்றி தரும்படி கேட்டுள்ளனர்.சில இடங்களில், பிப்., 28ம் தேதி இரவில், மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களின் தேர்வு பணி இடங்களை மாற்றி வழங்கினர். இதுவரை, பிளஸ் 2 தேர்வு பணி வழங்கப்படாத, தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும், தேர்வு துறை அனுமதியின்றி பணி ஒதுக்கப்பட்டது.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.