Title of the document

எமிஸ் வருகை பதிவு மூலம் மாணவர் எண்ணிக்கை இணையதளத்தில் பதிவேற்றப்படுவதால் ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைப்பதில் அரசுப்பள்ளிகளும், அரசு நிதியுதவி பள்ளிகளும் சிக்கலை சந்தித்து வருகின்றன.தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்ட எமிஸ் இணையதளம் மூலம் மாணவர்களின் அனைத்து விவரங்களும் பதிவேற்றப்படுகின்றன.

அதேபோல் அவர்களது அன்றாட வருகையும் பதிவேற்றப்படுகிறது. மாணவர்களின் அன்றாட வருகை பதிவு டி.என்.எமிஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக எமிஸ் எண் வழங்கப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடைமுறை தனியார் பள்ளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இதுவரை வருகை பதிவேட்டில் அதிக மாணவர் வருகையை பதிவேற்றம் செய்து ஆசிரியர் எண்ணிக்கையை தக்க வைத்து வந்தனர்.

குறிப்பாக அரசு நிதியுதவி பள்ளிகளில் இத்தகைய செயல் மூலம் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.இதனை ஆய்வு செய்ய செல்லும் கல்வித்துறை அதிகாரிகளை அரசு நிதியுதவி பள்ளிகளின் நிர்வாகம் ‘சரி’க்கட்டி வந்தன. இதனை தொடருவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசு, அரசு நிதியுதவி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் எமிஸ் செயலி பயன்பாட்டை கொண்டு வருவதில் சுணக்கம் காட்டி வருகின்றன.

இந்த செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் தங்கள் பள்ளிகளின் ஆசிரியர் பணியிடங்களை காவு கொடுக்க வேண்டி வரலாம் என்று அப்பள்ளிகள் அஞ்சுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் இணையவழி வருகை பதிவேடு பயன்பாட்டால் காகிதப்பயன்பாடு தவிர்க்கப்படுவதுடன், மாணவர்களின் வருகையை மாவட்ட, மாநில கல்வித்துறை நேரடியாக கண்காணிப்பதுடன், அன்றயை நிலையை அறிந்து கொள்ளவும் முடியும். மேலும் குறைவான மாணவர் எண்ணிக்கையை கொண்டு, அதிகளவில் கணக்கு காட்டி ஆசிரியர் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதேபோல் அந்தந்த பள்ளிகளின் சத்துணவு ைமயங்களிலும் சத்துணவு, முட்டை பயன்பாட்டு அளவில் பொய்யான கணக்கை காட்டுவது தவிர்க்கப்படும். இதனால் வேலூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் 2019 ஜனவரிக்குள் டி.என்.எமிஸ் இணையவழி வருகைப்பதிவை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post