Title of the document


பேரூர்:'ஏய்... இங்க பாருடி, என் புது கம்மல் நல்லாயிருக்கா' என, சக மாணவி கேட்க, அதற்கு வினோதினி, 'உன்னை மாதிரியே காது குத்தி கம்மல் போடணும்னு, எனக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனா, அம்மா, அப்பா இல்லையே' என்று கூறியுள்ளார்.இப்படி தனது உள்ளத்து ஆசையை, ஏக்கத்துடன் கூறிய மாணவிக்கு, பலரும் கை கோர்த்து, காதணி விழா நடத்திய நெகழ்ச்சி சம்பவம், கோவையில் நேற்று அரங்கேறியது. கோவை, பேரூர் அடுத்துள்ள ராமசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோதினி; அரசு துவக்கப்பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறார். பெற்றோரை இழந்த நிலையில், பாட்டி பாப்பம்மாளுடன் வசிக்கிறார்.மாணவிக்கு, பாட்டி, சக மாணவிகள், ஆசிரியர்கள் மட்டுமே உலகம். தன்னுடன் பயிலும் மாணவிகள், வண்ணமயமான கம்மல்களை அணிந்து வருவதை பார்த்து தனக்கும், காது குத்தி கம்மல் அணிய ஆசையாக இருப்பதாக, பாட்டியிடம் கூறியுள்ளார்.இதை தோழிகள் வாயிலாக அறிந்த தலைமையாசிரியை, மாணவிக்கு காதணி விழா நடத்த முடிவு செய்தார். பசியாற சோறு, மக்கள் சேவை மையம், கோவை மாநகர காவல் நண்பர் மற்றும் கல்லுாரி மாணவி நேசக்கரம் ஆகியோரின் உதவியுடன், காதணி விழா நடத்த அனுமதி கேட்டு, பேரூர் வட்டார கல்வி அலுவலர் தமிழ் செல்வியிடம் தெரிவித்தார்.காதணி விழாவை பள்ளியிலேயே நடத்த அனுமதி வழங்கியதுடன், அவரும் பங்கேற்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாணவிக்கு பட்டாடை, தங்க கம்மல்கள் வாங்கப்பட்டன.நேற்று காலையில் ஆசிரியர்கள், தொண்டு அமைப்புகள், கிராம மக்கள் முன்னிலையில், சக மாணவர்கள் சீர்வரிசை தட்டுக்களை எடுத்து வர, மாணவிக்கு காது குத்தும் விழா நடந்தது.காது குத்தும் போது, மாணவி கண்ணீர் சிந்தியதும், தலைமையாசிரியை அதை துடைத்து விட்டு அரவணைத்ததும், பார்த்தவர்களை உருக வைத்த கண்ணீர் நிமிடங்கள்!'வினோதினிக்கு ரொம்ப சந்தோஷம்'தலைமை ஆசிரியை கவுசல்யா கூறுகையில், ''வினோதினி, பெற்றோர் இல்லையென்றாலும் நன்றாக படிக்கக் கூடியவள். எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன்தான் இருப்பாள். அவளுக்கு 'பின்க்' கலர் உடை மற்றும் ஜிமிக்கி கம்மல் என்றால், மிகவும் பிடிக்கும். காதணி விழாவின் வாயிலாக, அவளின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளோம். அவளுக்கும், பாட் டிக்கும் ரொம்ப சந்தோஷம். மாணவர்களை எங்கள் குழந்தைகள் போலவே பார்க்கிறோம்,'' என்றார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post