Title of the document

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததால் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை குறித்து ஆய்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு, டிச., 10 முதல்- டிச. 22 வரை நடைபெற்றன. இதையடுத்து, டிச. 23 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 விடுமுறை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படுகின்றன. இதையடுத்து முதல் நாளிலேயே ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
 இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் வழியாக, புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி, தாமதமின்றி பாட வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
 அதே நேரத்தில், பிளாஸ்டிக் தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்டதால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிகளுக்கு மாணவர், ஆசிரியர்கள் கொண்டுவரக் கூடாது. நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்துவரக் கூடாது. மறுசுழற்சி செய்ய முடியாத தெர்மாகோல் போன்றவற்றை செய்முறை கற்றலில் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
 இதைப் பின்பற்றி பள்ளி வளாகங்களை பிளாஸ்டிக் இல்லாத பசுமை வளாகமாக மாற்ற வேண்டும். இதை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post