Title of the document

அரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர்அளித்த பேட்டி:

தமிழகத்தில் 250 பள்ளிகளில் புதிதாக ரூ. 1,142கோடி மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.23 கோடியில் 3 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

எங்கெல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையும் பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதலாக 6,500 பேருக்கு மேல் உள்ளனர்.அவர்களுக்கும் பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் விரைவில் நிரந்தரமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும்.ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர் ஆசிரியரும் அல்ல. பெற்றோரும் அல்ல. அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு அரசு உரிய விளக்கத்தைத் தெரிவித்துள்ளது.

காலிப் பணியிடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.கடந்த ஆண்டில் 13,100 க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டனர். நடப்பு ஆண்டிலும் 11 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவை இணைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்படவில்லை. தேவையான நிதி கோரப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வரை நிதி வழங்கலாம். குறைவாக அளித்தால், மத்திய அமைச்சரை சந்தித்து உரிய நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, நமக்கு வழங்க வேண்டிய ரூ. 1,100 கோடி நிதியில் ரூ. 472கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மீதமுள்ள நிதி விரைவில் கிடைக்கும். தமிழக அரசுக்கு எந்தப் பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை.

ஜனவரி 21-இல் அங்கன்வாடியில் உள்ள 51,214 மாணவர்கள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு மாற்றப்படவுள்ளனர். அடுத்த ஆண்டில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதால், ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களுக்குமேல் படிக்கும் நிலை ஏற்படும். அரசாணையை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17. பி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களே அரசாணையை எரிப்பது ஏற்புடையதல்ல.

அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் உள்பட 11 பேர் பதவி இழந்தனர். அரசாணை, அரசியலமைப்புச் சட்டம் என எதுவாக இருந்தாலும் அதை எரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகவே தற்போது விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post