Title of the document

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்த ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை, 2 நாளில் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர்(ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதில், தமிழகத்தில் பணியாற்றும் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பான இரு மனுக்களை, கடந்த டிசம்பர் 3ல் ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்தது. அப்போது நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை டிசம்பர் 10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சங்கங்களின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அரசு ஊழியர்களுக்கு உறுதியளித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் தொடர்வது, இந்த நீதிமன்றம் கடந்த 21.9.2017ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, தமிழக தலைமைச் செயலர் மற்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அரசு வக்கீல் வாதிடும்போது, ‘‘பழைய பென்ஷன் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளது,’’ என்றார். சங்கங்களின் சார்பில், ‘‘அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை,’’ என கூறப்பட்டது. இதையடுத்து, ‘‘அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது சம்பந்தமான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை 2 நாளில் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை பரிசீலிப்பது குறித்து அரசுத் தரப்பில் ஜனவரி 7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகள் குறித்து விசாரிக்கும் சித்திக் குழுவின் பணிக்காலம் நீட்டிக்கப்படுகிறது. இந்தக்குழு அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத அகவிலைப்படி அரியர்ஸ் வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இந்தக் குழுவின் அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 7க்கு தள்ளி வைத்தனர்.
மதுரையில் ஜாக்டோ - ஜியோ அவசர உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், வின்சென்ட், பால்ராஜ், மகேந்திரன், ஆகியோர் அளித்த பேட்டி: ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாலும், அவர்களின் அறிவுரைகளை ஏற்றும்,  எங்களது போராட்டத்தை தற்காலிகமாக அதாவது ஜனவரி 7ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளோம்.  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என அறிவித்தார். அவரின் அறிவிப்பை தற்போது அரசு நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம்,’’ என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post