Title of the document
திருக்குறள்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
திருக்குறள்:101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம்:



ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
பழமொழி
Failure is the stepping stone to success
தோல்வியே வெற்றிக்கு முதல் படி
இரண்டொழுக்க பண்பாடு
* என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
* பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் மண்டியிடுவது இல்லை.
- அப்துல்கலாம்
பொதுஅறிவு
1.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
2. இந்தியாவில் வீர தீர செயலுக்கான மிக உயரிய விருது எது?
பரம்வீர் சக்ரா விருது
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
கொள்ளு

1. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கிய இடமுண்டு.
2. மிக அதிகமான புரதம் கொண்ட பருப்பு வகை கொள்ளு. அதிக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், குறைவான கொழுப்பு மற்றும் சோடியம் கொண்டது.
3.கொள்ளில் உள்ள நார் சத்து மலச்சிக்கலுக்கு நிவாரணம் மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது.
4.அதிக/குறைவான இரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொள்ளில் உள்ள இரும்புசத்து சரி செய்கிறது.
English words and meaning
Gentry. மேன்மக்கள்
Gasp. மூச்சுத்திணறல்
Gash. ஆழமானவெட்டு
Gloom. துக்கம்
Grudge. உட்பகை,உட்பூசல்
அறிவியல் விந்தைகள்
புலி
* புலிகள் 11 அடி நீளம் வரை வளரக் கூடியது. வளர்ந்த பின் 300 கி. கி எடை வரை இருக்கும்.
* இவைகள் நன்கு நீந்தக் கூடியவை.
* இரவு நேரங்களில் தான் வேட்டை ஆடும். வேட்டை ஆடும் நேரங்களில் 5 அடி உயரம் வரை குதிக்கும்.
நீதிக்கதை
பெரிய குளம்
ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது.
வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உணவாகக் கொள்ள அதற்கு இயலவில்லை.
அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது.
ஒருநாள் கொக்கு தண்ணீருக்கு அருகாமையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.
மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து உண்ணவில்லை.
அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு அதிசயப்பட்ட ஒருநண்டு அதன் அருகே வந்து, "ஐயா, கொக்குப் பெரியவரே, வழக்கம்போல மீன்களைப் பிடித்துத் தின்னாமல் இன்று அமைதியாக இருக்கிறீர்களே, என்ன சமாச்சாரம்" என விசாரித்தது.
கொக்கு தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு, "நண்டுக் குழந்தாய், எனக்கோ வயதாகி விட்டது. இதுவரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வர இருக்கிறதே" என்று கொக்கு போலி சோகத்துடன் கூறிற்று.
"கொக்கு தாத்தா, மீன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்னைப் போன்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால் தயவு செய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் போகிறது என்று கூறுங்கள்" என்று நண்டு திகிலுடன் கேட்டது.
இன்று காலை சில செம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனக் கவனித்தேன்.
இந்த ஏரியில் ஏராளமான மீன் கிடைக்கும் போலிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அனைவரையும் அழைத்து வந்;து ஒரே நாளில் எல்லா மீன்களையும் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்தனை மீன்களின் உயிரும் பறி போய்விடப் போகிறதே என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது" என்று போலிக் கண்ணீர் வடித்தது கொக்கு.



கொக்கு சொன்ன தகவல் கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஏரியில் இருந்த நீர் வாழ் பிராணிகளுக்கெல்லாம் எட்டிவிட்டன.
அவையெல்லாம் திரண்டு கொக்கு இருக்குமிடம் வந்தன.
கொக்கு தாத்தா, எங்களுக்கு வரவிருக்கின்ற பேராபத்திலிருந்து தப்பிக் பிழைக்க வழியொன்றுமே இல்லையா? என அவை பரிதாபமாக கொக்குவிடம் கேட்டன.
"என் மீது உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். தொலைதூரத்தில் ஒரு காட்டின் நடுவே பெரிய குளம் இருக்கின்றது. அதிலுள்ள நீர் வற்றுவதில்லை காட்டுக்குள் இருப்பதால் செம்படவர்கள் அவ்வளவு தூரம் வரமாட்டார்கள் என் யோசனையை நீங்களெல்லாம் கேட்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் உங்களில் சிலரை என் முதுகின் மீது சுமந்து சென்று அந்தக் குளத்தில் சேர்த்து விடுகின்றேன். இரண்டொரு நாட்களில் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட முடியும். செம்படவர்கள் வந்தால் ஏமாந்து போவார்கள்" என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் பேசிற்று.
எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணிய மீன்கள் கொக்கு சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.
கொக்கு ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களைச் சுமந்து கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச்சென்று ஒரு பாறையில் போட்டு முடிந்தமட்டில் அவற்றைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டது.
மீதமிருக்கும் மீன்களை பின்னாளில் உண்பதற்காக பாறையின் மீது பரப்பி வெய்யிலில் உலர வைத்தது.
கொக்கு ஒவ்வொரு நாளும் புதியபுதிய பொய்களைச் சொல்லி மற்ற மீன்களை நம்ப வைத்து அவற்றைத் தன் உணவுக்காக கடத்திக் கொண்டு சென்றது.
ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த இடத்தைவிட்டு கொக்கு கூறும் குளத்திற்குச் செல்ல விரும்பி தன் எண்ணத்தைக் கொக்குவிடம் கூறிற்று.
கொக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது, இத்தனை நாட்களாக மீன்களை ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்டை ருசி பார்ப்போம் என்று தீர்மானித்து நண்டைத் தன் முதுகின்மீது ஏற்றிக் கொண்டது.
கொஞ்ச நேரம் கொக்கு பறந்து சென்றதும், நண்டு கொக்கை நோக்கி, "நீங்கள் சொல்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்" என்று கேட்டது.
நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண்ணத்தில் கொக்கு தான் மீன்களைக் காயவைத்திருக்கும் பாறையின் பக்கம் காண்பித்து, "அதுதான் குளம்" என்று ஏளனமாகக் கூறிற்று.
மீன்கள் உலர்த்தப்பட்டிருப்பதையும், பாறையைச் சுற்றிலும் மீன்முட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்ட நண்டுவிற்கு விஷயம் விளங்கிவிட்டது.
மற்ற மீன்களை ஏமாற்றித் தின்றதைப் போல தன்னையும் தின்னுவதற்காகவே அது சதி செய்து அழைத்து வந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்ட நண்டு கொக்கின் முதுகிலிருந்து மேலேறி அதன் கழுத்துப் பகுதியை தனது கொடுக்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக்கியது.
நண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள கொக்கு எவ்வளவோ பாடுபட்டும் இயலவில்லை.
நண்டு அதன் கழுத்தைத் தனது கொடுக்கு முனையில் துண்டித்து அதன் உயிரைப் போக்கிவிட்டது.
கெடுவான் கேடு நினைப்பான்.
இன்றைய செய்திகள்
20.11.18
* கஜா புயல் பாதித்த பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
* டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* சுற்றுப்புறச்சூழல் மாசு, காற்று மாசு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மின்னணு வாகனங்களை அரசு ஊக்கப்படுத்தி வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் அலுமினியத்திலும், தண்ணீரிலும் இயங்கும் காரைக் கண்டுபிடித்து இயக்கி வருகிறார்.
* உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லக்ஷயா சென் வெண்கலப்பதக்கம் வென்றார்.
* உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் இந்திய வீராங்கனை மனிஷாமெளன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post