Title of the document

கல்லூரி மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் படிப்பதற்கே நேரம் ஒதுக்குவது அதிசயமாக உள்ள காலகட்டம் இது. விளையாட்டு, பொழுதுபோக்கு என ஜாலியாக காலம் கழிப்பதில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அம்மாதிரியான மாணவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் மதுரை காமராஜ் யுனிவர்சிட்டியில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் நர்மதா.

கல்லூரி என்.எஸ்.எஸ்-ன் மாணவ பிரதிநிதியான நர்மதா, தான் வசிக்கும் வண்டியூர் மற்றும் சுற்றுபுறங்களில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுகள், ரத்ததானம், ஏழை குழந்தைகளுக்கு மாலைநேரப் பயிற்சி வகுப்பு என சுகாதாரம், சமூகம் மற்றும் கல்வி சார்ந்த சேவைகளை தனியாகவும், குழுவாகவும் தன்னால் இயன்றவற்றை கடந்த இரண்டு வருடங்களாக செய்துவருகிறார். நர்மதாவின் சமூக செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில் 2019 ஜனவரி 26ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமூக சேவைகளில் எப்படி நாட்டம் உண்டானது? எப்போதிருந்து இதுபோன்ற செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டீர்கள் என்று நர்மதாவிடம் கேட்டபோது, ‘‘என் அம்மா எப்போதும் சொல்வார்கள் ‘பிறருக்கு உதவும் குணம் உன்னோடு பிறந்தது. அதை மறந்திடாதே’ என்று எனக்கு சொல்லி வளர்த்தார். அப்போதிலிருந்தே சமூக பணிகள் மீது ஆர்வம் அதிகம் ஆனது.

பள்ளியில் படிக்கும்போது, நேரு யுவகேந்திராவின் துணை இயக்குநர் சாடாச்சரவேல் எங்கள் பள்ளிக்கு வந்து சமூக சேவைகள் செய்வதும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மாணவர்களின் கடமை என்றார். அவரின் அன்றைய பேச்சும், என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்ததும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாள் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவை என நண்பர்கள் மூலம் செய்தி
கேட்டு ரத்தம் கொடுத்தேன். அந்த கணம் எனக்கு மிகப்பெரிய மன திருப்தியைக் கொடுத்தது. அடுத்தவர் உயிர் காக்கும் இது போன்ற உன்னத பணியை நாம் ஏன் தொடர்ந்து செய்யக்கூடாது? மற்றவர்களையும் ஏன் செய்ய வைக்கக்கூடாது? என முடிவெடுத்து, சக மாணவிகளை வாட்ஸ்-அப் குழு மூலம் ஒன்றிணைத்தேன். மொத்தம் எட்டு வகையான ரத்த வகைகளுக்கும் தனித் தனியாக குரூப் ஆரம்பித்து அட்மினாக செயல்பட்டு எனக்கு வரும் செய்தியை உறுப்பினர்களுக்கு உடனடியாக பகிர்ந்துவந்தேன்.

ரத்த தானம் செய்பவர்களை அடையாளம் கண்டு பயனாளிகளுக்கு தேவையான ரத்தவகை சென்றடைவதை உறுதி செய்துகொள்கிறேன். இதுவரை 237 யூனிட் ரத்ததானம் செய்யவைத்துள்ளேன். இப்பணிக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டி.மருதுபாண்டியன் என்னை அழைத்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் நர்மதா.

‘‘நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யலாமே என்று தொடங்கிய பணியை நான் என் கிராமத்துக்கும் செய்ய ஆசைப்பட்டேன். அதன் முதல் கட்டமாக தினமும் கல்லூரிக்கு கிளம்பும் முன் காலையில் இரண்டு மணிநேரம் வண்டியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியின் வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியர்களுடன் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை வண்டியில் போட வைப்பேன்.

மேலும் மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்வது பற்றியும் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்வேன்’’ என்று சொல்லும் நர்மதா ‘ஸ்ரீ நாராயணி’ என்ற பெயரில் இளைஞர் நற்பணி மன்றம் அமைத்து தூய்மை பாரதத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

‘‘பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலைநேர பயிற்சி வகுப்பு நடத்த ‘ஸ்ரீ நாராயணி’ இளைஞர் நற்பணி மன்றம் அமைத்து ஏற்பாடு செய்தோம். அதன் மூலம் சுமார் 25 மாணவர்களுக்கு தற்போது மாலைநேர பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

வார இறுதி நாட்களில் அவர்களுக்கு கலாசாரம், நீதி போதனைகள், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கான செயல்பாடுகளைப் பார்த்து மதுரை கிழக்கு வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் நற்பணி மன்றத்திற்கு ஆறு சென்ட் நிலம் அன்பளிப்பாக கொடுத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

இந்த மாதிரியான சமூக செயல்பாடுகளுக்காகத் தான் என்னை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தேர்ந்தெடுத்துள்ளனர். என் அம்மா சிறு வயதில் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இப்போது செயல்படுத்துகிறேன். தனி ஆளாக எல்லா பணிகளையும் செயல்படுத்த முடியாது என்பதால் என் நண்பர்களையும் இணைத்துக்கொண்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினேன். என் நண்பர்களின் உதவி என்னை மேலும் சேவைப் பணிகளில் ஊக்கப்படுத்துவதாக உள்ளது.

குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பை என் கல்லூரிக்கும், என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக எண்ணுகிறேன்’’ என்கிறார் நர்மதா.வீணாக பொழுதை கழிக்காமல் சமூக நல்லெண்ணத்தோடு செயல்படும் இதுபோன்ற இளைஞர்களின் உயர்ந்த உள்ளத்தை நாமும் வாழ்த்தி வரவேற்போம்!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post