Title of the document
தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீதம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப் படுகிறது. இதுதொடர்பாக அரசு பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இடையே இது குறித்து பேச்சுகள் நடத்தப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது வழக்கம். அதன்படி மத்தியக் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு திசம்பருடன்  முடிவடைந்து விட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம்  தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின்னர் 34 மாதங்கள் ஆகியும்  இன்று வரை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.
அதேபோல், நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கான ஊதிய ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து  நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 22 மாதங்கள் முடிவடைந்த போதிலும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தீர்மானிக்கப்படவில்லை.
கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தீர்மானிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுவினர் கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுக்களை நடத்தியது. கடந்த 6 மாதங்களுக்கு முன் நடைபெற்ற பேச்சுக்களின் அடிப்படையில் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று தமிழக அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்ட போதிலும், அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை. புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால் 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 17,000 பேருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் அக்டோபர் 24 ஆம் தேதி கூட்டுறவு வங்கிகள் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2 ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். 13 ஆம் தேதி வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப் போவதாக கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீதம் ஊதிய உயர்வை முதல்வர் பழனிசாமி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு துறை அலுவலர்கள் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீத ஊதிய உயர்வும், பணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் 22,048 பேர் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக 143.72 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post