Title of the document
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
உரை:
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
பழமொழி :
Constant dripping wears away the stone
எறும்பு ஊர கல்லும் தேயும்
பொன்மொழி:
வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
-பாரதியார்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?
மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)
2.மால்குடி என்பது?
கற்பனை ஊர்
நீதிக்கதை
முட்டாள் – புத்திசாலி
ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சிரித்து விடுவர்.
அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் அவனை வரவழைத்து, “இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா?” என்று கேட்பர்.
ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது.
“இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும்,” என்று சொன்ன வீட்டுக்காரன்… அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான்.
சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, “நன்றாகப் பார்… ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. உனக்கு எது தேவையோ எடுத்துக் கொள்,” என்றான்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான்.
“ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு!” என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டான்.
“இவனைப் போன்ற முட்டாளை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது? சின்னக்காசை எடுத்துவிட்டு இவ்வளவு கூத்தாடுகின்றானே?” என்று சொன்னான் வீட்டுக்காரன்.
நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போல இருந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி, “இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசு உள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்,” என்றார் அவர்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்துச் சிந்தித்தான். ஐம்பது காசைத்தான் கடைசியாக எடுத்தான்.
“இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். எனக்கு வேலை இருக்கிறது,” என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர்.
“ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்ன மதிப்புடையது? அதை விட்டுவிட்டு வெறும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே… இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள்,” என்று அறிவுரை சொன்னார் நண்பர்.
“ஐயா, நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து ரூபாய் கிடைக்கிறது.
“நீங்கள் சொல்வது போல ஒரே ஒருநாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையே நீட்டமாட்டார்கள்,” என்றான் முட்டாள்.
இதைக் கேட்ட வெளியூர்காரர் அசந்து போய்விட்டார்.
இன்றைய செய்தி துளிகள்:
1.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்
2.அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு
3.ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கிய 1 மாதத்தில் 1 லட்சம் பேர் பயன்: மத்தியமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்
4.ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்
5.இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்04
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post