Title of the document


மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதல் முறை சிகிச்சை பெறுவதற்கு ஆதார் எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயமில்லை; அதே நேரத்தில் இரண்டாவது முறை அந்த காப்பீட்டின் கீழ் சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தேசிய சுகாதார அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி இந்து பூஷண் தெரிவித்துள்ளார்..
நாட்டு மக்களில் 50 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும் "ஆயுஷ்மான் பாரத்' என்ற தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார். உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான இதன் மூலம், ஏழை, எளிய மக்களின் மருத்துவத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்று அரசு உறுதி கூறியுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தில் பயனாளிகள் அளிக்க வேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்து அதனை செயல்படுத்தும் தேசிய சுகாதார அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி இந்து பூஷண் கூறியதாவது:
ஆதார் அட்டை எதற்கெல்லாம் கட்டாயம், எதற்கெல்லாம் தேவையில்லை என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை நாங்கள் முழுமையாக படித்து புரிந்து கொண்டுள்ளோம். அதன்படி, தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒருவர் முதல்முறை சிகிச்சை பெறும்போது ஆதார் அட்டை உள்பட எந்த ஒரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து இலவச சிகிச்சை பெற முடியும். ஆனால், அதே நபர் இரண்டாவது முறை சிகிச்சை பெறும்போது கண்டிப்பாக ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். ஆதார் எண் பெறவில்லை என்றால், அதற்காக விண்ணபித்து இருப்பதற்காக தரப்படும் ஆவணத்தை அளிக்க வேண்டும் என்றார்.
இத்திட்டம் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இப்போது வரை 47 ஆயிரம் பேர் இத்திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் பணம் கொடுக்காமலும் மற்றும் எந்தவித ஆவணங்களையும் நிரப்பாமலும் ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். இதில் 98 சதவீத பயனாளிகள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுவிட்டனர். இத்திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலங்கானா, ஒடிஸா, தில்லி, கேரளம் தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post