Title of the document
Image result for diwali


பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை, தமிழக அரசு முடிவு செய்ய கோர்ட்டு அனுமதி வழங்கி இருக்கிறது.


சுப்ரீம் கோர்ட்டில் அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் என்ற 3 சிறுவர்கள் சார்பில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது. எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 23-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், தீபாவளி அன்று இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கியது.

இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

வட மாநிலங்களில் இரவில் தீபாவளிக்கு தீபம் ஏற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தீபம் ஏற்றாமல் கார்த்திகை பண்டிகையன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் பெருத்த வேறுபாடு உள்ளது.

கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும்போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு ஏற்படும்.

எனவே, தீபாவளி பண்டிகையின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று காலை 4.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை கூடுதலாக 2 மணி நேரம் பட்டாசு வெடித்து கொண்டாட அனுமதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர் சங்கம், டெல்லி பட்டாசு விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டால் ஏற்கனவே தயாரித்த பட்டாசுகள் விற்பனை ஆகாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பட்டாசு உற்பத்தி தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இந்த ஆண்டு அமல்படுத்தக்கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழக அரசு வக்கீல் பா.வினோத் குமார் ஆஜராகி வாதிட்டனர். தமிழக அரசு தரப்பிலான வாதம் வருமாறு:-

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு டெல்லி மற்றும் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்தே உள்ளது. இந்த உத்தரவால் குழப்பம் நேரிட்டுள்ளது. அதனால் நாட்டின் பிற மாநிலங்கள் குறிப்பாக தமிழகத்துக்கு விளக்கம் தேவை.

ஏனெனில் தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் காலை நேரத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. எனவே பட்டாசு வெடிக்க அனுமதிக்கும் நேரத்தை இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை என்பதுடன் காலை 4.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கும் வகையில் தீர்ப்பில் திருத்தம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு நீதிபதிகள், “இது குறித்து நாங்கள் யோசித்து சில மாற்றங்களை கொண்டு வருகிறோம். டெல்லியில் பெரும் காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் இந்த உத்தரவை பிறப்பித்தோம். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும்” என்றனர்.

தொடர்ந்து பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கங்கள் மற்றும் சில பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் வாதிடுகையில், “பேரியம் போன்ற வேதிப்பொருட்கள் கலந்து பட்டாசுகளை தயாரிக்கக் கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. தவிர, பசுமை பட்டாசு என்றால் என்ன என்ற விளக்கம் எதுவும் தீர்ப்பில் இல்லை. இத்தீர்ப்பில் கூறப்பட்ட அனைத்தையும் அடுத்த ஆண்டு அமல்படுத்தும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்தியா முழுவதும் தீபாவளி அன்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால் பல்வேறு மாநிலங்கள் இடையே நிலவும் கலாசார மாறுபாடுகளை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையை அணுக விரும்புகிறோம்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பண்டிகை நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம். அந்த 2 மணி நேரம் எது என்பது பற்றி அந்தந்த மாநில அரசுகளே உரிய முடிவை எடுக்கலாம்.

பேரியம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கொண்டு பட்டாசு தயாரிப்பது மற்றும் அவற்றால் விளையும் சுகாதாரக்கேடுகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தரப்பில் அறிக்கையாக நாளை (இன்று) தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post