Title of the document

சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்கப்பள்ளியில் குழந்தை களுக்கான சத்துணவு சமைக்கும் பணியில் ஆசிரியைகள் ஈடுபட்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சத்துணவு ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1200 சத்துணவு மையங்களில் 2200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டங்களில் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமையில் சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 948 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களும் ஆதரவு தெரிவித்ததால், பெரும்பாலான பள்ளிகளில் சத்துணவு வழங்குவதில் தடை ஏற்பட்டது. சில பள்ளிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலையீட்டின்பேரில், வெளியாட்களைக் கொண்டு சத்துணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
ஆசிரியைகள் சமையல்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். கிராமப்புறங்களைச் சேர்ந்த இம்மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்து உணவு எடுத்து வராமல் சத்துணவையே நம்பியுள்ளனர். இதனை அறிந்த மொடக்குறிச்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், குழந்தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்து உதவுமாறு ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்று பள்ளி ஆசிரியைகள் ஒன்றிணைந்து, மாணவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்துள்ளனர். ஆசிரியர்களின் இப்பணிக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
மொடக்குறிச்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் சத்துணவு சமைத்துக் கொடுத்தது குறித்த தகவலை அறிந்த ஆசிரியர் சங்க அமைப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இத்தகைய செயல்பாடு இருப்பதால், ஆசிரியர்கள் யாரும் சத்துணவு பணியில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post