Title of the document


ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு போராட்டம் தீவிரம் அடைந்தது. அதற்கு பிறகு அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், ஒரு நபர் குழுவின் பரிந்துரையை வெளியிடுவதாகவும் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 
ஆனால், அரசு தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காத நிலையில் இந்த ஆண்டும் தொடர் போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கடந்த 4ம் தேதி அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் மூலம் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, அக்டோபர் 4ம் தேதி முறையான காரணத்தின் பேரில் சாதாரண விடுப்பு எடுத்திருந்தால், அதன் உண்மைத் தன்மை அறிந்து அந்த விடுப்பை அனுமதிக்கலாம் என்றும், முன் அனுமதி இல்லாமல் அக்டோபர் 4ம் தேதி எடுக்கும் தற்செயல் விடுப்பை ‘‘நோ ஒர்க்; நோ பே’’ என்ற அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். 
இதனால், கடந்த 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளது. இதற்கு மேற்கண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 
மேலும், சாதாரண விடுப்பை பயன்படுத்துவது என்பது, அடிப்படை விதிகளுக்கு உட்பட்ட விடுப்பு அல்ல. இந்த விடுப்பு பணியாளர்களுக்கு ஒரு சலுகை போன்றது. ஒரு அரசு ஊழியர் சில நேரங்களில் அரசுப் பணி செய்ய இயலாத நிலை ஏற்பட்டால், அரசுப் பணி செய்ய இயலாத நாட்களை முறைப்படுத்திக் கொள்ள இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 
இந்த விடுப்பை அரசு விடுமுறை நாட்களுடன் சேர்த்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிகள் அடிப்படை விதி எண் 85(3)ன்படி பார்த்தால் கடந்த 4ம் தேதி அரசுப் பணி செய்யாமல் இருந்துவிட்டு, அந்த நாட்களுக்கு சாதாரண விடுப்பு விண்ணப்பத்தை அந்தந்த அதிகாரிகளுக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பும் கடிதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாதாரண விடுப்பாகத்தான் கருத வேண்டும். எனவே, அந்த நாளை ‘நோ ஒர்க்; நோ பே’ என்று  தீர்மானிப்பது அடிப்படை விதி எண் 85(3)க்கு எதிரானது. 
சாதாரண விடுப்புக்கு காரணங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. 4ம் தேதி பணிக்கு வராத பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக காரணத்தை குறிப்பிட்டு மனு செய்திருந்தால் மட்டுமே அவர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார் என்று கருத முடியும். எனவே தலைமைச் செயலாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை அரசு பரிசீலிக்கவில்லை என்றால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post