Title of the document

தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ள சீருடை மாற்றத்தை அரசு உதவிபெறும் பெரும்பாலான பள்ளிகள் பின்பற்றாத நிலையில், கல்வித் துறை அலுவலர்கள் அரசு உத்தரவை நடைமுறைப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 வண்ணங்களில் சீருடையை பள்ளிக் கல்வித் துறை 2018-19 ஆம் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது. தனியார் பள்ளி மாணவர்களின் சீருடைக்கு நிகராக, அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளும் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில், இந்தச் சீருடை மாற்றம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளிகள் முழுவதிலும் சீருடை மாற்றம், கடந்த ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.
குறிப்பாக, அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, தனியார் பள்ளிகள் போல செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகத்துக்கு இந்த சீருடை மாற்றம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீருடைக்குத் தங்கள் விருப்பம்போல் வண்ணங்களை நிர்ணயித்துக் கொண்டு, தனியார் பள்ளிகளைப்போல் செயல்பட்டு வந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடை மாற்றத்தை ஐந்து மாதங்களாகியும் அமல்படுத்தவில்லை.
அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அனைத்து மாணவர்களும் புதிதாக அறிமுகப்படுத்திய சீருடையில் பள்ளிக்கு வருகின்றனர். 9, 10 மற்றும் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சீருடை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் சீருடை மாற்றம் முழுமையாக அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசு உத்தரவு நடைமுறைக்கு வராததற்கு, பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறப்படுகிறது.
அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகத்தை (தாளாளர்), மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெரும்பாலும் கேள்வி கேட்பதில்லை என்றும், மென்மைப் போக்கினை கடைப்பிடிப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் (2019-20) புதிய வண்ணங்களில் சீருடை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியது:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து வகையான சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கிடைக்கின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகம், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியை முடக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில் கூட, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும், அரசின் உத்தரவை கண்டுகொள்வதற்கு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகம் தயாராக இல்லை.
உதவிபெறும் பள்ளிகளில் சீருடை மாற்றம் அமலுக்கு வந்தால், தனியார் பள்ளி என்ற பிம்பம் உடைந்துவிடுவதோடு, கட்டணம் வசூலிப்பதற்கும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழக் கூடிய வாய்ப்பு உருவாகும்.
அரசின் உத்தரவை அமல்படுத்துவதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசின் உத்தரவை தீவிரமாக அமல்படுத்த கல்வி அலுவலர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post