Title of the document
உதகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற பள்ளிக் கலைத் திருவிழாவில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 51 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
"கலையருவி' எனப்படும் தமிழகப் பள்ளிக் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் 2017-18ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் 51 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.
அவர்களுக்கு  உதகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தமிழ் அகராதி  ஆகியவற்றை மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
 நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவிகளைத் தங்கள்குழந்தைகளைப்போல நினைத்துக் கல்வி கற்பிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பொது அறிவு மற்றும் சமூக பொறுப்பு அளிப்பது ஆசிரியர்களின் கடமையாகும். சிற்பி ஒரு சிற்பத்தை எவ்வாறு உருவாக்குகிறாரோ அதைப்போலவே ஆசிரியர்களும்
நல்ல மாணவ, மாணவிகளை உருவாக்க வேண்டும். இன்றைய மாணவ, மாணவிகளே எதிர்கால  இந்தியாவின் தூண்கள்  என்பதால் வரும் காலங்களில் அரசுப் பள்ளிகள் பொதுத் தேர்வுகளில் நூறு சதவீதம் வெற்றி கிடைக்கப் பாடுபட வேண்டும் என்றார்.
 இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட இலக்கியக் காட்சி, ஓவியம் வரைதல், களிமண் சிற்பம், நவீன ஓவியம், வாய்ப்பாட்டு, மெல்லிசை, நாடகம், பரதநாட்டியம், பிற மாநில நடனங்கள், கதை, கட்டுரை, கவிதை, செய்யுள் ஒப்பித்தல், பேச்சுப் போட்டி, வாய்ப்பாட்டு, கர்நாடக இசை, டிஜிட்டல் போட்டோகிராபி, கேலிச் சித்திரம் வரைதல்,  நாட்டுப்புற நடனம், தனி நடிப்பு ஆகிய கலை நிகழ்ச்சிகளில்
வெற்றி பெற்ற 51 மாணவ, மாணவிகளுக்குத் தலா ரூ. 1,000துக்கான பரிசுத் தொகை,  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தமிழ் அகராதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
 அத்துடன் தமிழக முதல்வர் தலைமையில் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில்
நடைபெற்ற ஆசிரியர்  தின விழாவில்  நீலகிரி மாவட்டத்தில் இருந்து  9 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றிருந்தனர்.
 இவ்விருதை அந்த 9 பேரும் மாவட்ட ஆட்சியரிடம் இவ்விழாவில்  காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நஸ்ருதீன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post