Title of the document
தாய்மொழி வழிக்கல்விதான் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் அங்கமான நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் வைரவிழா நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் ஹரிஹரசுதன் வைர விழா அறிக்கை வாசித்தார்.
இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
கிராமங்கள்- நகரங்களின் வளர்ச்சிக்கு இடையிலான வேறுபாட்டை நீக்குவதற்கான ஒரே வழி, கல்வியையும் தொழில்நுட்பத்தையும் கிராமப்புற மக்களுக்கு வழங்குவதாகும். அதனை 60 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் கல்லூரி வாயிலாகச் செய்து காட்டியவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்.
நாட்டின் வளர்ச்சிக்கு கிராமப்புற மேம்பாடு முக்கியமானது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வல்லுநர்களையும், அவர்களுக்கு உதவியாக இருந்த விவசாயிகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியாவின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது கிராமங்கள்தான். ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் களைய சிறு தானிய உணவு முறைகளை நாம் பின்பற்றவேண்டும். உணவு முறைகளில்தான் நமது கலாசாரம் அடங்கியுள்ளது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் தேசத்தின் முன்னேற்றம் சாத்தியமில்லை.
இளைஞர் சக்தியை சரியான பாதையில் கொண்டுசெல்ல அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, பொலிவுறு நகரம் போன்ற பல திட்டங்கள் இளைஞர்களை மனதில் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் அபரிமிதமான மனித ஆற்றல் நிறைந்துள்ளது. ஆனால், பயிற்சி பெற்ற திறனாளர்கள் 4.69 சதவீதம் மட்டுமே உள்ளனர். தென்கொரியாவில் 90 சதவீதம் பயிற்சி பெற்ற திறனாளர்களும், அமெரிக்காவில் 28 சதவீதத்தினரும், லண்டனில் 68 சதவீதத்தினரும் உள்ளனர். இத்துறையில் நாம் முன்னேறியாக வேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி, நான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் தாய்மொழியில் படித்தவர்கள்தான். தாய்மொழி வழிக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவதுதான் வாழ்க்கையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் நா.மகாலிங்கம் குறித்த எனது சிந்தனையில் அருட்செல்வர் என்ற தொகுப்பு நூலை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி குடியரசு துணைத் தலைவர் முன்னிலையில் வழங்கப்பட்டது. என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி நன்றி கூறினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் மன்ற மதிப்பியல் தலைவர் பாலசுப்பிரமணியம், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் ம.பாலசுப்ரமணியம், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேலு, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post