Title of the document

என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.டி. யில் ஆய்வு படிப்பு மாணவ, மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
திருச்சி என்.ஐ.டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரூ. 190 கோடியில் அமைக்கப்பட்ட  சீமென் உற்பத்திப் பொருள்கள் சிறப்பு மையம் மற்றும் ஆய்வகங்கள் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
 திருச்சி என்ஐடியில்  தொடங்கப்பட்டுள்ள இந்த  ஆய்வகங்கள் மற்றும் உற்பத்தி சிறப்பு மையங்கள் வேறு எங்கும் இதுவரையில் தொடங்கப்படவில்லை. இதுபோன்ற ஆய்வு மையங்களை கல்வி நிறுவனங்களில் தொடங்கும் போது, மாணவ, மாணவியருக்கு கல்வியுடன் தொழில் நுட்பத்திறன் மற்றும் அனுபவ அறிவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தவிர பேராசிரியர்கள்,  சிறு மற்றும் குறு நிறுவனத்தினர் என பலதரப்பட்டவர்களும் பயன்பெற முடியும்.
என்ஐடியில் கடந்தாண்டு நடைபெற்ற ஹெக்கத்தான் போட்டியில் (மென்பொருள் மட்டும்) சுமார் 40,000 பேர் பங்கேற்று, தொழில் நுட்பப் பிரச்னைகளுக்கு தேவையான வகையில் மொத்தம் 54 வகையான தீர்வுகள் உருவாக்கப்பட்டன . அதுவே நிகழாண்டு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியில் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று (மென்பொருள், வன்பொருள் இரண்டுக்கும்)  சுமார் 100 தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றைக் கொண்டு புதியவற்றையும்  உருவாக்க  முடியும்.
பொதுவாகவே இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புக்குப் பின்னர் வெளி நாடுகளில் சென்று பி.எச்டி போன்ற ஆய்வுப் படிப்புகள் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் அங்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைதான். வெளிநாடுகளில் அவற்றுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது.
அதைப்போலவே , உள் நாட்டிலேயே ஆய்வுப் படிப்புகளை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆய்வுப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையை ரூ. 1 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி அளவிலும் ஆய்வுப் படிப்புகளை அதிகரிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 மேலும் வெளிநாட்டிலிருந்து பேராசிரியர்கள் வரவழைத்து என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் என்.ஐ.டி. இயக்குநர் மினி ஷாஜிதாமஸ் தலைமை வகித்தார். சீமென்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சுப்ரகாஷ் சௌத்ரி, பேராசிரியர்கள் துரைசெல்வம், கண்ணபிரான், ராகவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post