Title of the document

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: 3வது நீதிபதி தீர்ப்பு
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என 3வது நீதிபதி சத்திய நாராயணன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை எனவும் 3வது அவர் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க இருந்த தடை நீக்கப்படுவதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றுசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதபதி  இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதே சமயம், சபாநாயகர் உத்தரவு செல்லாது, 18 எம்எல்ஏக்களையும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து மூன்றாவது நீதிபதி இதுகுறித்த தீர்ப்பை வழங்குவார் என இந்திரா பானர்ஜி அறிவித்தார்.
மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார். அவர் முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான, மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், முதல்வர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இதோ வரும் அதோ வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட தீர்ப்பு இன்று காலை 10-30 மணிக்கு வழங்கப்பட்டது
3வது நீதிபதி  தீர்ப்பு விவரம்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என 3வது நீதிபதி சத்திய நாராயணன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை எனவும் 3வது அவர் தெரிவித்தார்.
பின்னடைவு இல்லை: தினகரன் பேட்டி
3வது நீதிபதி தீர்ப்பு குறித்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில் ‘‘18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பால் அரசியல் பின்னடைவு ஏதும் இல்லை. மேல்முறையீடு செய்வது பற்றி 18 எம்எல்ஏக்களிடம் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.
ஆதரவான தீர்ப்பல்ல; நியாயமான தீர்ப்பு; தம்பித்துரை
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பித்துரை கூறுகையில் ‘‘18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியானது தான் என சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு நியாயமான தீர்ப்பு. எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு அல்ல. ஜெயலலிதாவின் ஆசியால் எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது’’ எனக் கூறினார்.
---------------------------------
பின்னணி விவரம்
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராகவிருந்த நிலையில் சிறைக்கு செல்ல நேர்ந்தது. ஓபிஎஸ் தனியாக பிரிந்து தர்மயுத்தம் தொடங்கினார்.
டிடிவி தினகரன் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி தொடர்ந்தது. இடையில் டிடிவி தினகரனை ஓரங்கட்டிய எடப்பாடி அணி ஓபிஎஸ்ஸுடன் கூட்டு வைத்தது. இதனால் டிடிவி அணியினர் என்று அழைக்கப்பட்டவர் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சட்டபேரவை தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விளக்கம் கேட்கப்பட்டது. இதில், ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ், தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி வழக்குத் தொடுத்தனர். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எங்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, நீதிமன்றம் ட் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டார்.
பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீண்ட வாதத்துக்கு பின்னர், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி 23-ம் தேதி ஒத்திவைத்தது.
பின்னர் அனைவரும் எதிர்ப்பார்த்த தீர்ப்பு கடந்த ஜூன் 14 அன்று வெளியானது. இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post