Title of the document



மாணவிகள் ராஜேஸ்வரி, காயத்ரி ஆகியோர் வரைந்த காந்தி தொடர்பான ஓவியங்களைப் பார்வையிட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்.

காந்தியடிகளின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி, அவர் தொடர்பான 150 விதமான ஓவியங்களை வேலூரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் வரைந்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஓவியக் கண்காட்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.எ.ராமன் திறந்து வைத்து பரிசுகள் வழங்கினார்.
வேலூர் அருகே காட்பாடி அக்ஸீலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவிகள் எஸ்.ராஜேஸ்வரி, ஆர்.காயத்ரி.
சிறுவயதிலிருந்து ஓவியத்தில் திறமை பெற்ற இந்த மாணவிகள், காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி, காந்தியடிகள் தொடர்பாக தலா 75 ஓவியங்கள் வீதம் 150 விதமான ஓவியங்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகம், தண்டியாத்திரை உள்ளிட்ட போராட்டங்கள், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி காரணமாக காந்தி ரயிலிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட நிகழ்வு, கஸ்தூரி பாய், நேதாஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் என காந்தி குறித்து பலதரப்பட்ட ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஓவியக்காட்சியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். தொடர்ந்து 2 நாள்கள் இந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவியங்கள் குறித்து மாணவிகளின் பயிற்சியாளரும், சத்துவாச்சாரி அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியருமான செல்வகணேஷ் கூறியதாவது: இரு மாணவிகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். ராஜேஸ்வரியின் தந்தை சேகர், மதுபானக் கூடத்தில் தொழிலாளியாகவும், காயத்ரியின் தந்தை ராமதாஸ் ஓட்டல் தொழிலாளியாகவும் உள்ளனர். இத்தகைய வறுமை நிலையிலும் இவ்விரு மாணவிகளும் தங்களது ஓவியத் திறமையின் மூலம் மாவட்ட, மாநில அளவில் பரிசுகள் பெற்றுள்ளனர்.
காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த 150 வகையான ஓவியங்களும் கடந்த 3 மாதங்களில் வரையப்பட்டதாகும். பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த பிறகு மாலையிலும், விடுமுறை நாள்களிலும் வரைந்து இந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த ஓவியங்களை மாவட்டத்தில் நடைபெறும் காந்தி தொடர்பான விழாக்களில் காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post