Title of the document
 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 11.57 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்கக் கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 285 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி அவர் மேலும் பேசியது: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 82 லட்சம் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் 41 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றன. நாங்கள் உங்களுடன் போட்டியிடுவதாகக் கருதக்கூடாது. உங்கள் பணி இன்னும் சிறக்கத் தேவையான உதவிகளை அரசு செய்து தரும்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு மூன்றாண்டு காலத்துக்கு அங்கீகாரம் வழங்கலாம் என கருதி அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், சிபிஎஸ்இ- சுயநிதிப் பள்ளிகளின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தடையாணை உள்ளதால், தற்போது ஓராண்டு காலத்துக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகத்தில் 500 சுயநிதிப் பள்ளிகளுக்கும் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இணையதள வசதியை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிசம்பர் மாத இறுதிக்குள் மாநிலத்தில் 672 பள்ளிகளில் அடல் அறிவியல் ஆய்வகத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 லட்சத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசு நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் 132 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருந்தாலும் 2.85 லட்சம்பேர்தான் பட்டயக் கணக்காளர்களாக உள்ளனர். எனவே, தலைசிறந்த பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு, மாநிலத்தில் 25,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் செங்கோட்டையன்.
விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை வகித்து பேசினார். கேரளத்துக்கு அதிக நிவாரண நிதி வழங்கியவர்களைப் பாராட்டி மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி பேசினார்.
விழாவில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 285 பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

  1. அரசு பள்ளி தருவதைப்போல் தனியார் பள்ளி மாணவ செல்வங்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்... 🙏🙏🙏

    ReplyDelete
  2. அரசு பள்ளி தருவதைப்போல் தனியார் பள்ளி மாணவ செல்வங்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்... 🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post