Title of the document



அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:





ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது.


தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.

இதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post