Title of the document

அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு முன்பு அவர்களது பொருளாதார நிலை தொடர்பான தரவுகளை சேகரிக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இதனால் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் இருந்த பெரிய தடை நீங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2006-ஆம் ஆண்டில் நாகராஜ் என்பவரது வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதில், அரசுப் பணி பதவி உயர்வில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டிய கட்டாயமில்லை; அதேவேளையில், மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ, பதவி உயர்வில் மேற்கண்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால், சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, எஸ்சி, எஸ்டி ஊழியர்கள், பொருளாதார அளவில் பின்தங்கியிருப்பதை நிரூபிப்பதற்கான தரவுகளை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும்; மேலும், அரசின் உயர் பதவிகளில் அந்த பிரிவினரின் பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லாததையும், இடஒதுக்கீடு அளிப்பதால் ஒட்டுமொத்த நிர்வாக திறனில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதனிடையே, இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய, மாநில அரசுகள் உள்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் தேவையற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு வாதிட்டது.
அதேவேளையில், உயர் பதவிகளில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன், எஸ்.கே.கௌல், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அப்போது, இடஒதுக்கீடு தொடர்பாக 2006-இல் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர்.அதேவேளையில், பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு முன்பு, எஸ்சி, எஸ்டி ஊழியர்களின் பொருளாதார நிலை தொடர்பான தரவுகளை அரசு சேகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீதிபதிகள் நீக்கினர். இந்திரா சஹாணி வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்புக்கு முரண்பாடான வகையில் மேற்கண்ட நிபந்தனை உள்ளதால் அதனை நீக்குவதாக தெரிவித்த நீதிபதிகள், இதர நிபந்தனைகள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மேலும், நாகராஜ் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் இதர பகுதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post