Title of the document




கற்பித்தல் குறைபாட்டோடு அடிப்படை கட்டமைப்பு குறைபாடும் சேர்ந்துதான் அரசுப் பள்ளிகளின் மீது பெரிய நம்பிக்கையின்மையை மக்களிடம்  உருவாக்கியது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1289 உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு  தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வுக் கூடங்கள், நூலக அறை, கழிவறை, சுற்றுச்சுவர் கட்டுதல், குடிநீர் வசதி  உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை ரூ.1257 கோடி செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான நிதி, நபார்டு வங்கியின் கடனுதவியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2017-18ம் நிதியாண்டில் 300க்கும் மேற்பட்ட பள்ளி களில்  கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ரூ.100 கோடி மதிப்பிலான  பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு காரணங்களால் 150 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்தும் பயன்படுத்தத்  தவறியதால் ரூ.150 கோடி நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தியிடம்  பேசினோம். ‘‘அரசுப் பள்ளிக்கூடங்கள், அரசுக் கல்லூரிகள், அரசு மாணவர் விடுதிகள் என்றாலே வசதிக் குறைபாடுகளும் சுகாதாரக் குறைபாடுகளும்  இல்லாமல் இருக்காது என்பதுதான் உண்மை நிலை. ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பங்களிப்புகளால் ஒரு சில அரசுப் பள்ளிகள் மட்டுமே  சிறந்த கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட பள்ளி களாக உள்ளன. இதன் காரணமாகவே பணத்தைச் செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களை  நோக்கி வசதி உள்ளவர்கள் போய்விடுகிறார்கள்’’ என்று ஆதங்கப்படுகிறார் மூர்த்தி.

பள்ளிகளுக்கான அடிப்படை கட்டமைப்புக்கான நிதி பயன்பாடு குறித்து விவரிக்கும்போது, ‘‘தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் கடனுதவியின் மூலம்  கடந்த 2017-18ம் நிதியாண்டில் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதற்கட்டமாக 100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு நிர்வாகக் காரணங்களால் 150  கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. வரும் நிதியாண்டில் மீண்டும் திட்ட அறிக்கை தயார் செய்து இதற்கான நிதியை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சிக்கல்கள் காரணமாக தமிழ்நாட்டின் தொடக்கக் கல்விக்கு கடந்த (2017 -18) நிதி ஆண்டில் நடுவண் அரசிடமிருந்து எந்த நிதியும்  வழங்கப்படவில்லை. இடைநிலைக் கல்வித்திட்டத்திற்கு மட்டும் 5047.98 லட்சம் நிதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு நகராட்சி மற்றும் மாநகராட்சி  அமைப்பும் மக்களிடம் சொத்து வரியுடன், அந்தச் சொத்தின் ஆண்டு வாடகை மதிப்பில் 5% வரை கல்வி வரி வசூலிக்கின்றது. இந்த நிதிகள் எல்லாம்  கல்விக்காக முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பல காலமாக கல்வி வரியை பொதுநிதியாக மாற்றி வேறு வகையில் செலவிடுகிறார்கள்.

இதுபோன்ற தவறுகளை தட்டிக் கேட்காத ஏழைகளின் பள்ளிகளாக அரசுப் பள்ளிகள் இருப்பதால்தான் அவை புறக்கணிக்கப்படுகின்றன’’ என்று  நிதர்சனமான உண்மைகளை அடுக்கடுக்காக எடுத்துரைத்தவர் பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் பட்டியலிட்டார். ‘‘அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை. அக்கல்வி இன்றைக்கு தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. பணம் கொட்டும் தொழிலாக  மாறிவிட்டதால், அடிப்படை வசதிகள் முதற்கொண்டு அலங்கார வேலைகள் வரை அத்தனையையும் செய்து மக்களை தன்வசம் இழுத்துக்  கொண்டிருக்கிறார்கள் தனியார் பள்ளி நிர்வாகத்தினர்.

அரசுப் பள்ளிகள் அலங்காரமாக இல்லை என்றாலும்கூட பரவாயில்லை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதுமற்ற நிலையில் முக்கால்வாசி பள்ளிகள் உள்ளன. முக்கியமாக கழிப்பறை, மதில்சுவர், பாதுகாப்பான வகுப்பறைகள் உள்ளிட்டவை அடங்கும். ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் உட்கார  பெஞ்ச் இல்லாத நிலை இன்றும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கட்டமைப்புகளை செய்துதருவதாக அறிவிப்புகளும் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. ஆனால், நடைமுறையில் எதுவும் நடப்பதில்லை. அதை விடுத்து, புதுப்புதுத் திட்டங்களைப் போட்டு பணிச்சுமையை அதிகப்படுத்துகிறார்கள்.

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர்களையும் வரவழைத்து குறைநிறை மற்றும் தேவைகளைக் கேட்க வேண்டும்.  கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். டெண்டர் விட வேண்டும்.  இதையெல்லாம் செய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் முதற்கொண்டு அரசு அலுவலர்கள் வரை முன்வருவதில்லை. முறையாக திட்ட  அறிக்கை தயார் செய்து அதைப் பயன்படுத்தாமல் இந்தத் தொகை திருப்பி அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒருசில இடங்களில் சட்டமன்ற  உறுப்பினர் அவரவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து சிறுசிறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் கூட அவர்களின் லாபத்துக்காக. ஆனால், அரசாங்கம் ஒதுக்கும் பணத்தை அரசு அதிகாரிகள் முறையாக பயன்படுத்தாதது வேதனைக்குரியது.  வாய்ப்புகள் இருந்தும் பயன்படுத்தாதது மற்றவர்களுக்கு மறைமுகமாக உதவுவது போன்றதாகும். 1966 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட முனைவர்  கோத்தாரி தலைமையிலான கல்விக்குழு, அரசின் ஆண்டு வருவாயில் குறைந்தது 6% கல்விக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறியது. ஆனால், இதுவரை  நடுவண் அரசின் கல்விக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு 4% -ஐ தாண்டவில்லை. அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் கல்விக்காகத் தேவையான நிதி  ஒதுக்கினால் மட்டுமே அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்’’ என்றார் மூர்த்தி.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post