Title of the document


முன்பெல்லாம் வருவாய்த் துறையில் சான்றுகள் வாங்க வேண்டுமென்றால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என ஒவ்வொரு அலுவலகமாக பல முறை அலைந்து திரிந்து, பல நூறு ரூபாய்கள் செலவு செய்து பெற வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் அரசின் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிப்போர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட சான்றிதழ், பட்டா ஆகியவற்றை எளிதாகப் பெறும் வகையில், பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டதையடுத்து, ஒரே இடத்தில் விண்ணப்பித்து, அங்கேயே சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. மேலும் தேவையில்லாத செலவுகளும் குறைந்தன. சான்றுக்கான கட்டணம் கட்டுவதோடு சரி. வேறு எந்த செலவும் செய்யத் தேவையில்லை என ஆனது. பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சல் குறைகிறது. சான்றிதழ் தயாராகிவிட்ட தகவலுக்குப் பின்னர் விண்ணப்பித்த மையங்களுக்கே சென்று சான்றுகளை வாங்கிக் கொள்ள முடிகிறது. இதனால் சான்றிதழ்களை கேட்டு இடைத்தரகர்களை நாடும் சூழலும் மறையத் தொடங்கியது.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலமாக ஆரம்பத்தில் ஒரு சில சான்றிதழ்களுக்கே விண்ணப்பங்கள் பெற்று வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் 20 வகையான சான்றிதழ்களுக்கும், பட்டா மாறுதல் மற்றும் சமூக நலத் துறை தொடர்பான சேவைகளுக்கும் விண்ணப்பிக்க முடிகிறது.
20 வகையான சான்றுகள்
வருவாய்த் துறை மூலமாக வழங்கப்படும் சான்றுகளான, ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்று, இதர பிற்படுத்தப்பட்டோர் சான்று, சொத்து மதிப்பு சான்று, அடகு வணிகர் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளிக் கல்வி சான்றிதழ்கள் நகல் பெற சான்று, ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, விதவைச் சான்று, கலப்புத் திருமணச் சான்று, திருமணம் ஆகாதவர் சான்று, வேலைவாய்ப்பு இல்லாதவர் சான்று, விவசாய வருமானச் சான்று, நிலையான இருப்பிடச் சான்று, குடியிருப்புச் சான்று, குடும்ப இடம்பெயர்வு சான்று, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சான்று என 20 வகையான சான்றிதழ் பெற அரசு பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சான்றிதழ் தயாரான பின்பு, விண்ணப்பித்த மையங்களிலேயே பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆன்-லைன் விண்ணப்பம்
வருவாய்த் துறை மூலமாக வழங்கப்படும் இத்தகைய சான்றிதழ்களுக்காக பொதுமக்கள், பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் மட்டுமன்றி, தாங்களே ஆன்-லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருந்தபடி, இத்தகைய சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து, ஆன்-லைன் மூலமாகவே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
சான்றிதழுக்கு விண்ணப்பித்த பின்னர் எந்த அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது (status) என்பதை அந்த இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம். சான்று தயாரானவுடன் குறுந்தகவல் (sms) பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு வந்து சேரும். உடனே சான்றைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளலாம்.
சான்றிதழ்கள் பெற முதலில் HTTPS://WWW.TNESEVAI.TN.GOV.IN/CITIZEN என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மள்ங்ழ் ய்ஹம்ங் பெற்ற பின்னர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதற்கான வழிமுறைகள் குறித்து HTTPS://WWW.TNESEVAI.TN.GOV.IN/VIDEOTUTORIAL.HTML மற்றும் HTTPS://WWW.TNESEVAI.TN.GOV.IN/USERMANUAL.HTML ஆகிய வலைதள முகவரிக்கு சென்று தெளிவாக தெரிந்து கொண்டு, அதன்படி விண்ணப்பிக்கலாம்.
இந்த வலைதளத்தில் உள்ளே சென்று எளிதில் விண்ணப்பிக்கும் வகையில், அதன் சர்வர் குறைபாடு இல்லாமல் வேகத்துடன் செயல்பட்டால், ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்தல் அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
UMANG செயலி பயன்பாடு
ஆன்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் UMANG என்னும் செயலியை பதிவிறக்கம் செய்துவைத்துக் கொண்டு, அதன் மூலமாக ஜாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டாவுக்கும் கூட இதில் விண்ணப்பிக்க முடியும். இவற்றுக்கு சேவைக் கட்டணமாக ரூ.60-ஐ வலைதளவங்கி (Internet Banking) அல்லது கிரெடிட், டெபிட், ரூபே அட்டைகள் மூலமாக செலுத்த வேண்டும்.
- வை. இராமச்சந்திரன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post