Title of the document


உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது என பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத நிலை மீண்டும் ஏற்படும். எனவே மாணவர்களின் நலன் கருதி இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 1 தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது; பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே போதுமானது என மீண்டும் அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பிளஸ் 1 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்காத அரசாணையால் தனியார் பள்ளிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும்.
எனவே, இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற்று, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அமைப்புகள், கல்வியல் செயல்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடைய கருத்துக்களை கேட்டறிந்து, அதன்பின் இந்த விஷயத்தில் அரசு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்பட அரசுப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post