Title of the document


கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது


வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது


கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது


 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன


1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது


இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது



உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர்


அரசு பொதுத்தேர்வு, உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது



இதனைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது


இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது


அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளவாறு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன


 மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும்


இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும்


மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது


மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது


 குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது


எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டுள்ளார்


அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post