Title of the document

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவிபெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து, பல்வேறு போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் 25க்கும் மேற்பட்ட பரிசுகளையும் பெற்றுள்ள மாணவர் கிஷோர்குமார் படிப்பிலும் சிறந்து விளங்கியதால் ஆதிதிராவிட நலத்துறை மூலம் திறன் அறிதல் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு, அரசு நிதியுதவி மூலம் விருப்பப்பட்ட தனியார் உண்டு உறைவிட  பள்ளியில் படிக்க அரசாணை 112-ன் படி  உத்தரவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி சேர்க்க மறுப்பதால் அம்மாணவனின்  எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.  

 இதுபற்றி கிஷோர்குமாரின் தந்தை மாணிக்கம் நம்மிடம் பேசுகையில், ``தேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி தலைமையாசிரியர், மற்றும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் சின்ன வயதில் இருந்தே என் மகன் அனைத்து விதமான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்கி வருகிறார். ரொம்ப புத்திசாலி என்று எல்லோரும் பாராட்டினார்கள். இதுபோன்ற மாணவர்களைத் தேர்வு செய்து சிறப்பாக செயல்படும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை தங்கி படிப்பதற்கான செலவுகளை அரசு செய்கிறது. அந்த முறையில் சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 மாணவர்களில் கிஷோரும் அடக்கம். இவர் தங்கிப் படிக்க மதுரை அழகர் கோயில் அருகில் இருக்கும் மகாத்மா ரெசிடென்சியல் பள்ளி சிறப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டு சிவகங்கை கலெக்டர் அப்பள்ளியில் சேர்ப்பதற்கு உத்தரவிட்டு அந்த ஆணையை எங்களிடம் கொடுத்தார். கடந்த 29-ம் தேதி சேர்க்க வந்தபோது, சேர்க்க முடியாது என்று எங்களை அவமானப்படுத்தி வெளியில் அனுப்பி வைத்துவிட்டார்கள். தற்போது சிவகங்கை மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன். என் மகனின் படிப்பு வீணாகிடுமோ என்று பயமாக உள்ளது'' என்றார்.

இது குறித்து மதுரை சி.இ.ஓ.விடம் கேட்டபோது, ``உடனே நான் விசாரிக்கிறேன். அந்த மாணவரையும், பெற்றோரையும் வந்து பார்க்கச் சொல்லுங்கள்'' என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்.

அரசு உத்தரவின் கீழ் மாணவர் கிஷோரை சேர்க்க மறுக்கும் மதுரை அழகர்கோயில் மகாத்மா உண்டு உறைவிடப் பள்ளியைப் பற்றி சிவகங்கை மாவட்ட நிர்வாகம், கல்வித்துறைக்குப் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post