Title of the document

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
 சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெற்றது.
 சிறப்புப் பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள்? தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் 122 எம்.பி.பி.எஸ். இடங்கள் (5 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்டிருந்தன. எனினும், நீட் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பெற்ற 26 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
 மருத்துவப் பரிசோதனை: கலந்தாய்வில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களின் உறுப்பு பாதிப்பு விகிதம் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு மொத்தம் 21 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
 விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள்: விளையாட்டு வீரர்களுக்கு 7 எம்.பி.பி.எஸ். மற்றும் 1 பி.டி.எஸ். இடம், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 10 எம்.பி.பி.எஸ். மற்றும் 1 பி.டி.எஸ். இடம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
 விளையாட்டுப் பிரிவில் 7 பேருக்கு எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒருவருக்கு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்பட்டு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில் 10 பேருக்கு எம்.பி.பி.எஸ். இடங்களும் ஒருவருக்கு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்பட்டு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
 38 எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 பி.டி.எஸ். இடங்கள்: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வின் இறுதியில் 38 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களும், 2 மாணவர்களுக்கு பி.டி.எஸ். இடங்களும் என மொத்தம் 40 பேருக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 2,409 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு...பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை காலை 9 மணி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கப்பட்ட 38 எம்.பி.பி.எஸ். இடங்கள் போக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,409 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) உள்ளன; சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சிறப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் போக, அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 83 பி.டி.எஸ். காலியிடங்கள் உள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post