Title of the document


தமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளது.

நீட் தேர்வில், ஆங்கில பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் கேள்விகளில் பிழை இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 10-ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது. பிழையுள்ள 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், 196 மதிபெண்களை வழங்கி, தரவரிசைப் பட்டியலை திருத்தி வெளியிடுமாறு சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.



 கேள்விகளில் பிழை இருந்ததால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளானதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கின் அடிப்படையில், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடைக்க வழிவகை ஏற்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் சிபிஎஸ்இ ஆலோசித்து வந்தது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இன்ற சிபிஎஸ்இ சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்த்து, ஏற்கனவே,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் சார்பில், நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், தங்களது கருத்தைக் கேட்காமல், உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் கேவியட் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேல்முறையீடு என்னவாகும்?: பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, ஆங்கிலத்துடன், அவர்களது பிராந்திய மொழியுடன் கூடிய இரண்டு கேள்வித் தாள்கள் வழங்கப்படும். ஒருவேளை, பிராந்திய மொழிக்கான மொழிபெயர்ப்பு தெளிவின்றி இருந்தால், ஆங்கில கேள்வித்தாளே இறுதியானதாகக் கருதப்படும்'' என்று நீட் தேர்வுக்காக சிபிஎஸ்இ வகுத்துள்ள விதிமுறைகளில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தமது வாதத்தை முன்வைக்கக் கூடும்.

நீட் தேர்வானது, 180 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, மொத்தம் 11 மொழிகளில், 136 மையங்களில் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4-ஆம் தேதி வெளியாகின. தமிழகத்தில் 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் மூலம் 1.07 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post