மருத்துவக் கலந்தாய்வுக்கான இணையதளம் முடக்கம்!


மருத்துவக் கலந்தாய்வுக்கான இணையதளம் முடக்கம்!
மருத்துவக்
கலந்தாய்வுக்கான இணையதளம் இரண்டு நாட்களாக முடங்கியுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்றுமுன்தினம் (ஜூன் 28) வெளியிடப்பட்டது. மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை(ஜூலை 1) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களைப் பார்ப்பதற்கு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தை மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது.

ஆனால் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை இணையதளம் சரிவர இயங்கவில்லை. சென்னையில் இருப்பவர்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று தரவரிசை பட்டியல் தொடர்பான தகவல்களை பெற்று வருகின்றனர். இந்த வாய்ப்பு கூட இல்லாத வெளியூர் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கலந்தாய்வு தொடர்பான தகவலும் இந்த இணையதளத்தில்தான் வெளியிடப்படும் என்று கூறியிருந்த நிலையில், இரண்டு நாட்களாக இணையதளம் முடங்கியுள்ளதால்,மாணவர்களும் பெற்றோர்களும் கவலையில் உள்ளனர்.

இதுதொடர்பாக, மருத்துவ கல்வி இயக்ககத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் ஊழியர் கூறுகையில், பிஎஸ்என்எல் தொலைபேசியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நெட்வொர்க்கில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், இணையதளம் முடங்கியுள்ளது. விரைவில் சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.