தமிழகத்தில் முதன்முறையாக 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலியில் பதிவேற்றம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் ...!!


செல்போன் செயலி மூலம் 12 ஆயிரம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை தமிழகத்தில் முதன் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.


 திருவண்ணாமலை மாவட்டத்தில், கல்வித் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன், தினசரி வருகை, இடை நிற்றல் தவிர்த்தல் போன்ற பல்வேறு நடவடிக்கையில் மாவட்ட கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் அனைவரது வருகையையும், செல்போன் செயலியில் விரல் ரேகையை பதிவு செய்யும் முறை மூலம், வருகைப்பதிவேடு பராமரிக்கும் நடைமுறை, தமிழகத்தில் முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய பரிசோதனை முயற்சி நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.


 அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தங்களுடைய வருகைப்பதிவை நேற்று தங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்திருந்த செயலி (ஆப்) மூலம், விரல் ரேகையை பதிவு செய்து, தங்களுடைய வருகைப்பதிவை உறுதிபடுத்தினர்.


மேலும், ஸ்மார்ட் செல்போன் இல்லாத, வருகைப்பதிவு செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்யாத ஆசிரியர்கள், தங்களுடைய பள்ளி தலைமை ஆசிரியரின் செல்போனில் விரல் ரேகை வைத்து வருகைப்பதிவை உறுதி செய்தனர்.ஆசிரியர்கள் தங்களுடைய செல்போனில் விரல் ரேகையை பதிவு செய்த நேரம், எந்த இடத்தில் இருந்து பதிவு செய்தனர் என்ற விபரம், ஆன்லைன் இணைய வசதி மூலம் உடனுக்குடன் முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகத்தில் உள்ள கணினியில் பதிவாகும் வகையில் நெட் ஒர்க்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரல் ரேகை பதிவின்போது, இன்டர்நெட் சிக்னல் கிடைக்காவிட்டாலும் (ஆப்லைன்) விரல் ரேகையை பதிவு செய்யலாம்.


இணைய சிக்னல் கிடைத்ததும், விரல் ரேகை பதிவு செய்த விபரம் சரியான நேர விபரத்துடன் கிடைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், புதிய நடைமுறை அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சிக்னல் குறைபாடு, இணையத்தை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் போன்ற காரணங்களால் தடுமாற்றம் ஏற்பட்டது. ஆசிரியர்களின் விரல் ரேகை பதிவு விபரம் முறையாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள சர்வரில் பதிவாகவில்லை.இந்த குறைபாடுகள் உடனடியாக சரி செய்யப்படும் என அனைத்து பள்ளிகளுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது.இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் கூறியதாவது: ஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பதிவேற்றும் நடைமுறை திட்டமிட்டபடி நடைமுறைக்கு வந்திருக்கிறது. முதல் நாளில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.


சிக்னல் குறைபாடு, செயலியை பயன்படுத்துவதில் பயிற்சியின்மை, பதிவேற்றிய விபரம் இணையம் வழியாக வந்தடைவதில் ஏற்பட்ட சிக்கல் போன்றவை ஏற்பட்டன.


அவற்றை எல்லாம், சம்பந்தப்பட்ட ெதாழில்நுட்ப பொறியாளர்கள் சரி செய்துள்ளனர்.தொடர்ந்து இந்த நடைமுறை அமலில் இருக்கும்.ஆரம்ப நாட்களில் ஏற்படும் குறைகளை கண்டறிந்து, உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மிகவும் எளிய நடைமுறைதான், ஆசிரியர்கள் பதற்றம் அடைய வேண்டாம்.

 செல்போன் செயலியை பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு சரி செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் முதன்முறையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த புதிய திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து அடுத்த சில நாட்கள் வரை ஆய்வு செய்யப்பட்டு, அவையும் சரிசெய்யும் முயற்சிகள் நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.