Title of the document





பார்வை குறைபாடு உள்ள நபரை எம்பிபிஎஸ் படிக்க அனுமதிக்கலாமா? என்பது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறைந்த அளவே பார்வைத் திறன் உள்ள குஜராத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். எம்பிபிஎஸ் படிப்பில் தான் சேர்வதற்கு மாற்றுத்திறனாளி சான்றிதழை தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், அகில இந்திய அளவில் நீட் தேர்வில் 4,68,982 ஆவது இடத்தில் உள்ளேன். அதே நேரத்தில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 419ஆவது இடத்தில் உள்ளேன். ஆனால், எனது பார்வைத் திறன் குறைபாட்டின் அடிப்படையில் என்னை மாற்றுத் திறனாளியாக ஏற்க தில்லி வர்த்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மறுத்துவிட்டது. அதற்கான சான்றிதழையும் தரவில்லை. ஆமதாபாதில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியையும் இது தொடர்பாக அணுகினேன். ஆனால், அவர்களும் எனக்கு உரிய சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டனர். எனவே, எனது மனுவை அவசர வழக்காக விசாரித்து, நான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர உதவ வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதிகள் யு.யு.லலித், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர் மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியுமா என்று வியப்பு ஏற்படுகிறது. வழக்குரைஞர், ஆசிரியர் போன்ற பணிகளில் பார்வை திறன் குறைந்தவர்கள் பலர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், பார்வை குறைபாடு உள்ளவர் மருத்துவராக எப்படி வெற்றிகரமாக செயல்பட வாய்ப்பு உள்ளது என்று தெரியவில்லை. இது தொடர்பாக யோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றனர்.
மனுதாரரான மாணவர் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சஞ்சய் ஹெக்டே, கோவிந்த் ஜி ஆகியோர், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள எங்கள் மனுதாரர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மருத்துவப் படிப்பில் சேர உரிய சான்றிதழை வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கோரினர்.
அதையடுத்து, ஆமதாபாத் பிஜே மருத்துவமனையில் அந்த மாணவர் மூன்று நாள்களில் நீதிமன்ற உத்தரவுடன் நேரில் செல்ல வேண்டும். அங்கு அவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனை நடத்தி, அவர் கூறும் குறைபாடு குறித்து உரிய சான்றிதழை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசும், குஜராத் அரசும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post