Title of the document
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுவை ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் 1,54,491 பேர் தேர்வு எழுதினர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள், அதன் காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்ப அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 3-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 751 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை, மதியம் என இரு பிரிவுகளாகத் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற முதல் பிரிவு தேர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களில் 81,886 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற 2-ஆவது பிரிவு தேர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களில் 72,605 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இரு பிரிவுகளாக நடைபெற்ற தேர்வில் மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் கலந்து கொண்டனர். இது 78.12 சதவீதமாகும்.
புதுச்சேரியில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு: புதுச்சேரியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி, ஆல்பா பொறியியல் கல்லூரி, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி, கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி உள்பட 7 மையங்களில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
முதல் பிரிவு தேர்வில் 901 பேரும், 2-ஆவது பிரிவு தேர்வில் 895 பேரும் என மொத்தம் 1,796 பேர் கலந்து கொண்டனர். இது 90.02 சதவீதமாகும்.
தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில், ஆதார் அட்டை மூலம் விவரங்கள் சரிபார்ப்பு, பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தரைதளத்திலேயே தேர்வு எழுத வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வு முடிவுகள் வருகிற 20-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெறும். வகுப்புகள் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரம் அறிய www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.in என்ற இணையதளத்தை மாணவ, மாணவிகள் பார்வையிடலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post