Title of the document
அரசுப் பணிக்கு இந்தி அறிவு கட்டாயமா? என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அடிப்படை இந்தி அறிவைப் பெற்றிருக்க வேண்டும்; இந்தி தெரியாதவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற மொழிகளை அழித்து விட்டு, இந்தியை ஊக்குவிப்பதற்கான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
கொல்கத்தாவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு துணைப் பதிவாளர், உதவிப் பதிவாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட 20 பதவிகளுக்கான ஆள்தேர்வு விளம்பர அறிவிப்பில் இந்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் இந்தியை அறிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது; திருவனந்தபுரம், திருப்பதி, புனே, போபால், பெர்ஹாம்பூர், மொஹாலி ஆகிய இடங்களிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இவ்விதி பொருந்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எந்த ஒரு அரசு பணிக்கும் அந்த பணியை செய்வதற்கு தேவையான தகுதி மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும்.
55 ஆண்டுகளுக்கு முன் ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிப்பது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும். எனவே, இந்தி அறிவு தேவைப்படாத எந்த பணிக்கும் அதை கட்டாயம் என்று அறிவிக்கக்கூடாது.
கொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான ஆள் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற்று புதிய அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post