Title of the document

தொலைதூர மற்றும் திறந்தநிலை கல்வி மையங்களுக்கான யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தொலைதூர மற்றும் திறந்த வெளி கல்வி மையங்கள் நடத்த அனுமதி வழங்குவதற்காக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) குறைந்தபட்ச மொத்த சராசரி தர புள்ளி முறையை (சிஜிபிஏ) கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் யுஜிசி இதற்காக சட்டதிருத்தம் செய்து புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி பல்கலைக்கழகங்கள் மொத்தம் உள்ள 4 புள்ளிகளில் 3.26 புள்ளிகள் பெற்றால் மட்டுமே தொலைதூர கல்வி மையங்களுக்கான அங்கீகாரம் புதுப்பித்து வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எங்களது பல்கலைக்கழகத்துக்கு ஏற்கெனவே பல்கலைக்கழக தர நிர்ணயக் குழு 3.09 புள்ளிகளை (ஏ கிரேடு) வழங்கியுள்ளதால் வரும் 2019-2020-ஆம் கல்வியாண்டு வரை தொலைதூர மற்றும் திறந்தவெளி கல்வி மையங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது புதிய விதிமுறைகளின்படி எங்களது பல்கலைக்கழகத்துக்கான தொலைதூர மற்றும் திறந்தவெளி படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பிற பல்கலைக்கழகங்களும் பாதிக்கப்படும்.

எனவே யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக யுஜிசி பிறப்பித்த புதிய விதிமுறைகளுக்கு 6 வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க யுஜிசிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post