பதவி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்படும் வரை தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு


பதவி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

 இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


 தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்றது.
 இதில், ஜூன் 19ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

 அதன்படி, ஜூன் 21இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை எனவும், அதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டாதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடையாது எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 15 ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்வித் துறை புறக்கணித்து வருகிறது.
 எனவே இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்து உரிய அரசாணை வெளியிடப்படும் வரை தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.