Title of the document
மாணவர் சேர்க்கை குறைந்ததால் பி.இ. இடங்களைப் பாதியாகக் குறைக்க தமிழகத்தில் உள்ள 157 பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.
முதல் கட்டமாக ஒரு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கைகள், ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த 2011 முதல் குறையத் தொடங்கியது.
 இதனால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கும், இடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
 இதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஏஐசிடிஇக்கு கல்லூரிகள் அனுப்ப வேண்டும். ஏஐசிடிஇ அனுமதி அளித்த பிறகே, கல்லூரியை மூடவோ அல்லது இடங்களைக் குறைக்கவோ மூடியும்.
 2018-19 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த 13 பொறியியல் கல்லூரிகளும், இடங்களைப் பாதியாகக் குறைக்க 150-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளும் விண்ணப்பித்திருந்தன.
 157 கல்லூரிகளுக்கு அனுமதி: இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த ஏஐசிடிஇ, 2018-19 கல்வியாண்டில் இடங்களைப் பாதியாகக் குறைத்துக்கொள்ள தமிழகத்தில் 157 பொறியியல் கல்லூரிகளுக்கும் நாடு முழுவதும் 859 பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது.
 இக்கல்லூரிகள் அனைத்தும் மாணவர்கள் ஆர்வமாகச் சேர்ந்து வரும் கணினி அறிவியல் (சிஎஸ்இ), மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ), இயந்திரவியல், தகவல் தொழில்நுட்பப் பொறியியல், உற்பத்திப் பொறியியல் படிப்புகளை பாதியாகக் குறைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரங்கள் அனைத்தும் ஏஐசிடிஇயின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன.
 மூடப்படும் ஒரு கல்லூரி: தமிழகத்தில் ஒரு பொறியியல் கல்லூரி உள்பட நாடு முழுவதும் 31 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த முதல் கட்டமாக ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.
 கோவையைச் சேர்ந்த கே.டி.வி.ஆர். பொறியியல் தொழில்நுட்ப அறிவுப் பூங்கா என்ற கல்லூரிக்குத்தான் இந்த அனுமதியை ஏஐசிடிஇ வழங்கியிருக்கிறது.
 29 புதிய பொறியியல் கல்லூரிகள்
 மாணவர் சேர்க்கைக் குறைவால் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதும், மாணவர் சேர்க்கை இடங்களைப் பாதியாகக் குறைப்பட்டு வந்தபோதும், 2018-19 கல்வியாண்டில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவது அதிகரித்திருக்கிறது.
 ஏஐசிடிஇ புள்ளி விவரப்படி தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் புதிதாக 29 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இளநிலை பொறியியல் படிப்புகளை மட்டும் நடத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. அதாவது , பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் மொத்தம் 2,97,560 பி.இ., பி.டெக். இடங்கள் இடம்பெற்றுள்ளன.
 கடந்த ஆண்டில் தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இவற்றில் 2,69,251 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன.
 2016-இல் 527 பொறியியல் கல்லூரிகளில் 2,79,397 இடங்கள், 2015-இல் 533 பொறியியல் கல்லூரிகளில் 2,85,254 இடங்களும், 2014-இல் 532 பொறியியல் கல்லூரிகளில் 2,91,144 இடங்களும் 2013-இல் 525 பொறியியல் கல்லூரிகளில் 2,80,569 பி.இ. இடங்களும் இடம்பெற்றிருந்தன

 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post