Title of the document

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்து இருந்தார். அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை வெளியிட்டு, இது தமிழக அரசின் வரி வருவாய் தொகையில் 70 சதவீதம் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை(விளம்பரம்) அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலையும், அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடு நிலவி வருகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில், ‘அரசு அலுவலர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை திட்ட செலவினமாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர வருவாய் செலவினமாக கருதக்கூடாது’ என்று தெளிவாக கூறி உள்ளார். இதனை முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரும் வழிமொழிந்து உள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தலைவருமான கு.தியாகராஜன் கூறும்போது, ‘எங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் 15 முதல் 20 சதவீதம் தான். ஆனால், கடந்த ஆண்டு எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளத்தை 55 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இது அவர்கள் சம்பளத்தில் 100 மடங்கு அதிகமாகும். அரசு ஊழியர்களை விட எம்.எல்.ஏ.க்களுக்கு தான் அதிக சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post