Title of the document

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. தேர்வில் 1 லட்சத்து 33,568 பேர் கலந்துகொண்டார்கள். 
தேர்வு முடிந்து 2110 பேரின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பணிகள் தொடங்கியது. இந்நிலையில், இந்த தேர்வில் பங்கேற்றவர்களில் 196 பேருக்கு மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்தியகுற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில், மதிப்பெண்களை கூடுதலாக வழங்குவதற்காக லட்சக்கணக்கில் கைமாறியதாக தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக பல முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தேர்வு எழுதியபலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.

இந்த முறைகேடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைமுக்கிய கட்டத்தில் உள்ளது. அதனால்தான் அந்த தேர்வை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக வரும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்த அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாளுக்கான ஒரிஜினல் ஓஎம்ஆர் சீட்டை தயார் செய்த நிறுவனம், அதை பணத்திற்காக வெளியே விட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமார்48 லட்சம் வரை இதற்காக கைமாறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் இதுபோன்ற ஊழல் நடைபெறுவதற்கு ஒரு முடிவு கட்ட நீதிமன்றம் விரும்புகிறது.  முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தேர்வு எழுதிய 196 பேரை தவிர மற்றவர்களின் தேர்வை ஏன்  ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

முறைகேடு நடந்ததை பிரித்துப் பார்க்க முடியாது. அதனால்தான் ஒட்டுமொத்தமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தற்போது மிகவும் தடையாக இருப்பது ஊழல்தான். தற்போது ஊழல் என்ற சாத்தான் கேன்சரைப்போல் நம்நாட்டில் புரையோடிப்போய் உள்ளது. மக்கள் பணியில் இருப்பவர்கள் ஊழலில் மூழ்குவதை தடுத்தால் நாடு வேகமாக முன்னேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post