Title of the document

எழுத படிக்க தெரியாத வாடிக்கையாளர்களுக்கு வங்கி படிவம் நிரப்பி கொடுக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி

திசையன்விளை:  குட்டத்தில் உள்ள வங்கியில், எழுத படிக்க தெரியாத வாடிக்கையாளர்களுக்கு 5ம் வகுப்பு மாணவி படிவங்களை நிரப்பிக் கொடுத்து வருகிறார்.
நெல்லை மாவட்டம் குட்டத்தை சேர்ந்தவர் பகவதி (48).

இவர், செவல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு முருகானந்தவல்லி என்ற மனைவியும், பிரகல்யா (10), அஸ்மிதா (6) என இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். வேலை நிமித்தமாக பகவதி, குடும்பத்துடன் செவல்குளத்தில் வசித்து வருகிறார்.

இவரது 2 குழந்தைகளும் செவல்குளம் தூய பவுல் மெட்ரிக். பள்ளியில் படித்து வருகின்றனர். பிரகல்யா 5ம் வகுப்பும், அஸ்மிதா 1ம் வகுப்பும் படிக்கின்றனர்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால், இவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊரான குட்டத்திற்கு வந்துள்ளனர்.

பகவதி தனது மகள் பிரகல்யா பெயரில், குட்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கி மாதந்தோறும் பணம் செலுத்தி வருகிறார். மேலும் இந்த கணக்கிற்கு ஏடிஎம் கார்டும் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறையும் மகளின் கணக்கில் பணம் செலுத்தும் போதும் பிரகல்யாவை வங்கிக்கு அழைத்து வந்து அவரது கையால் விண்ணப்பத்தை நிரப்ப செய்வது வழக்கம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் வங்கிக்கு பணம் செலுத்த வந்தபோது வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது எழுத படிக்க தெரியாத பாமர மக்கள் பலர், வங்கி விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் அவதிப்பட்டதை பார்த்து பகவதி அவர்களுக்கு விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்தார்.

தந்தையின் செயலை கண்ட பிரகல்யா, தானும் தந்தைக்கு உதவியாக விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்தார்.

பிறருக்கு உதவும் மகளின் செயலை கண்ட பகவதி தினமும் காலை 10 மணிக்கு பிரகல்யாவை வங்கிக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு மாலை வந்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

பிரகல்யாவின் இந்த செயலுக்கு வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் ஊழியர்கள் ஊக்கம் அளித்தனர். தற்போது பிரகல்யாவிற்கு என தனியாக நாற்காலி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர் பணம் செலுத்த, எடுக்க, செல்போன் நம்பர் இணைக்க, ஏடிஎம் கார்டு பெற, பிற வங்கிகளுக்கு பணம் அனுப்ப என தனித்தனியாக உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் வாடிக்கையாளர்களுக்கு நிரப்பிக் கொடுக்கிறார்.

வங்கிக்கு வரும் எழுத படிக்க தெரியாத பாமர மக்கள் நேரடியாக பிரகல்யாவிடம் சென்று விண்ணப்பங்களை நிரப்பிய பின் சம்பந்தப்பட்ட கவுன்டர்களுக்கு செல்கின்றனர்.

இவரது செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். இதுகுறித்து பகவதி கூறியதாவது: ‘பள்ளி விடுமுறைக்காக சொந்த ஊர் வந்தேன்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு எனது மகள் பிரகல்யா பெயரில் உள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்த எனது மகளுடன் உள்ளுரில் உள்ள வங்கிக்கு வந்தேன். வழக்கம் போல் பணம் செலுத்த வங்கி விண்ணப்பத்தை அவளை நிரப்ப செய்தேன்.

அப்போது பலரும் விண்ணப்பம் நிரப்ப இயலாமல் அவதியுற்றதை கண்டு அவர்களுக்கு உதவி செய்தேன்.

எனது மகளும் எனக்கு உதவியாக விண்ணப்பங்களை நிரப்ப ஆரம்பித்தாள்.

அவளது செயல் கண்டு வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் அவளுக்கு ஆர்வம் அளித்தனர்.

அதுமுதல் தினசரி காலை 10 மணிக்கு வங்கிக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு மாலை வந்து அழைத்து செல்வேன்.

நான் ஊரில் இல்லாத நாட்களில் பிரகல்யா யாருடைய துணையுமின்றி தனியாக வங்கிக்கு வந்து மாலை வீட்டிற்கு வந்து விடுகிறாள்.

விடுமுறை நாட்களில் செல்போன், கம்ப்யூட்டர் என்று வீணாக பொழுதை போக்குவதற்கு பதில் பாமர மக்களுக்கு உபயோகமாக எனது மகள் செய்யும் சேவை எனக்கு பெருமையாக உள்ளது’ என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post