Title of the document

ஜாக்டோ - ஜியோ சார்பில் சென்னையில் நேற்று நடந்த கோட்டை முற்றுகை போராட்டம், 20ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள உயர்நிலை குழு கூட்டம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:
கோட்டை முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மே 6ம் தேதியே எங்கள் அமைப்பின் நிர்வாகிகளை வீடு புகுந்து கைது செய்தனர். ஒவ்வொரு தாலுக்காவிலும் உள்ள உறுப்பினர்களை தேடித் தேடி 3,000 பேரை கைது செய்து எங்களின் போராட்டத்தை முடக்க முயன்றனர். ஆனால், போலீசாரிடம் சிக்காத நிர்வாகிகள் 250 தனியார் பஸ்களிலும், 400க்கும் அதிகமான வேன்களிலும் ஏறி சென்னை  புறப்பட்டனர். அவர்களை நடுவழியில், டோல்கேட்களில் இறக்கிவிட்டனர். எங்கள் உறுப்பினர்கள் வந்த பஸ்களின் பெர்மிட்டை ரத்து செய்வோம் என்றும் மிரட்டியதோடு, வேன் டிரைவர்களின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டனர்.

நடுவழியில் இறக்கிவிட்டாலும் பரவாயில்லை என்று கூறி, அதிகாலை 2 மணிக்கு சென்னையை நோக்கி பல உறுப்பினர்கள் நடக்கத் தொடங்கினர். பின்னர், அவ்வழியாக வந்த பஸ்களில் ஏறி சென்னை வந்துள்ளனர். எங்கள் அமைப்பை சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்தனர். கைது செய்யப்பட்டு விடுதலையானதும்  அனைவரும், மீண்டும் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டோம். அதைத்தொடர்ந்து போலீசார் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். சென்னையில் கைது செய்யப்பட்டிருந்த முக்கிய நிர்வாகிகளை போலீஸ் வாகனத்தில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அழைத்து வந்தனர். வேன் டிரைவர்களின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அளித்ததோடு, எங்கள் உறுப்பினர்கள் வந்த வேன்களிலேயே சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்தனர். அதேபோல், வெளியூர்களில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ததோடு, அதுதொடர்பாக வயர்லெஸ் மூலம் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்தே தற்காலிகமாக பேராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தோம்.

ஆனால், கடைசி வரை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராதது பெரும் தவறு. நாங்கள் என்ன தீவிரவாதிகளா, நாங்களும் அரசின் அங்கம் தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று கவர்னர் உரையில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாகவும் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளோம். வரும் 20ம் தேதி திருச்சியில் 114 சங்கங்களின் நிர்வாகிள் 250 பேர் ஒன்று கூடி அடுத்தகட்ட பேராட்டம் தொடர்பாக முடிவெடுப்போம். அதற்குள் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பேராட்டம் வெடிக்கும். இவ்வாறு அன்பரசு கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post